யார் அநாதைகள்...

இஸ்லாத்தின் பார்வையில் பருவ வயதை அடைய முன் தந்தையை இழந்தவர் அநாதை எனப்படுவார். இவர்கள் வாழ்க்கையில் முகவரியை இழந்தவர்களை போன்றவர்கள் எனவேதான் இவர்களை கண்காணித்து அரவணைக்கும் படி இஸ்லாம் அழைக்கின்றது. இவர்களை பராமரிப்பதை இஸ்லாம் ஓர் சமூக பொறுப்பாக கருதுகிறது.

அநாதைகள் கவனிப்பாரற்று விடப்பட்டால் எதிர்காலத்தில் கொலை, கொள்ளை கற்பழிப்பு போன்ற சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களாக வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. இதனால் சமூகமே ஏன் ஒட்டுமொத்த தேசமே பல அழிவுகளைச் சந்திக்க நேரிடும்.

முறையான கண்காணிப்பு, ஆரோக்கியமான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தான்தோன்றித்தனமாக அவர்கள் விடப்படும் போது இது போன்ற நிலைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது போய்விடும். எனவே இவ்வாறான குழந்தைகள் தவறான வழிக்குச் சென்று விடாமல் அவர்களை நற் பிரஜைகளாக வளர்க்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு உள்ளது என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நீங்கள் அநாதைகளை சீர்படுத்துவது மிகவும் நன்றே. நீங்கள் அநாதைகளோடு கலந்து வசிக்க நேரிட்டால் (அவர்கள்) உங்கள் சகோதரர்களே’. (2:220)

அகிலத்திற்கே அருட்கொடையாய் உதித்த நபி (ஸல்) அவர்கள் உலகில் பிறக்கும்போதே தந்தையை இழந்த அநாதையாய் தான் வந்து உதித்தார்கள்.

ஆறு வயதில் அன்னையையும் இழந்து ஆதரவற்ற நிலையில் தவித்தார்கள். அவர்களின் துன்பங்கள் மேலோங்கிய கால கட்டத்தில் அமைதி இழந்து நின்ற அண்ணலாரை அல்லாஹூத்தஆலா ஆதரவான வார்த்தைகளால் அமைதிப்படுத்தும்போது அவர்களின் அநாதை நிலையை எடுத்துச் சொல்லி அவர்களின் மனதை தேற்றுகிறான்.

‘நபியே! உங்களை இறைவன் கை விடவும் இல்லை, உங்களை வெறுக்கவும் இல்லை.  உங்களை அநாதையாகக் கண்டு அவன் உங்களுக்கு தங்கும் இடம் அளித்து ஆதரிக்கவில்லையா?. எனவே நீங்கள் அநாதைகளைக் கண்டால் கடுகடுக்காதீர்கள், (93:3,6)

இஸ்லாத்துக்கு முன்னர் அநாதைகள் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கென உரிமைகள் கிடையாது அவர்களது சொத்துக்கள் சூரையாடப்பட்டன. இவ்வாறு இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் ஒரு அநாதையாக பிறக்கின்றார்கள். அல்லாஹ் அவர்கள் மூலமாகவே அநாதைகளுக்குரிய உரிமைகள் கடமைகள் என்ன என்பதை முழு மனித குலத்துக்கும் தெளிவுபடுத்துகிறான்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த நபித் தோழர்கள், குறிப்பாக பெண்கள் கூட அநாதைகளை வளர்த்து வந்துள்ளனர். உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு அநாதைப் பெண்ணை வளர்த்து வந்துள்ளார்கள்.

எனவே ஒருவர் அநாதை எனும் நிலையை அடைவது ஒரு சமூகத்தின் பார்வையில் குறையல்ல அது அல்லாஹ்வின் ஏறபாடு. மாற்றமாக அவர்கள் சமூகத்தால் பராமரிக்கப்படாமாமையே ஒரு குறையாகும். அவ்வாறே அநாதைகள் என்போர் தாழ்த்தப்பட்டவர்களும் அல்ல அந்தஸ்தால் அறிவால் குறைந்தவர்களும் அல்ல. மாறாக அவர்களை பராமரிப்பதன் ஊடாக எதிர்காலத்தில் சமூகம் பல நன்மைகளை அவர்கள் மூலமாக அடையலாம். அதனால் தான் அநாதைகள் ஆதரிக்கப் படவேண்டும். சமூகத்தில் அவர்களுக்கும் சம அந்தஸ்து கிடைக்கவேண்டும் என்ற உற்சாகமூட்டுகையில் அவர்களை ஆதரிப்பவர்களுக்கு என்ன பயன் கிட்டும் என்று சொல்ல முற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள்

‘அநாதைகளை ஆதரிப்பவர்கள் நாளை சொர்க்கத்தில் என்னோடு இருவிரல்கள் இணைந்தது போல மிக நெருக்கமாக இருப்பார்கள், என்று கூறிவிட்டு தனது இரு விரல்களையும் இணைத்து தூக்கி காண்பித்தார்கள்’ (புஹாரி)

அபூ உமைமா,
றக்வான.


Add new comment

Or log in with...