கிளிநொச்சி, இரணைதீவில் கொவிட்-19 உடல் அடக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (03) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று காலை 9.00 மணியளவில் இரணைமாதாநகர் இறங்குதுறையில் இடம்பெற்றது
இரணைதீவு மக்களும் கிராம மட்ட அமைப்புகள் மற்றும் கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் பங்குத் தந்தையர்களும், சிவில் அமைப்புகளும் கலந்து கொண்டனர்.
கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவு பகுதியை தெரிவு செய்துள்ளதாக நேற்றைய தினம் (02) அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
குறித்த தீர்மானம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும், அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதிக்கு அறிவித்தல் ஏதுமின்றி இரகசியமாக சென்ற குழு அதற்கான சிபாரிசினை வழங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் கொவிட்-19 உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவு பூர்வீக குடிகளாக இருந்து வரும் மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டு இறுதியில் வட மாகாண ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மகஜர்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.
(பரந்தன் குறூப்நிருபர் - யது பாஸ்கரன்)
Add new comment