காத்தான்குடி பிரதேச செயலகத்தின் காணிக்கிளை மூடப்பட்டது | தினகரன்

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் காணிக்கிளை மூடப்பட்டது

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா கொவிட் தொற்று உறுதியானதால், செயலகத்தின் காணிக் கிளை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலக காணிக் கிளையில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த உத்தியோகத்தர் கடமையாற்றும் காணிக்கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இப்பிரிவில் கடமையாற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பிரதேச செயலக மோட்டார் போக்குவரத்து அனுமதிப்பத்திரப் பிரிவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்தக் காணிக்கிளையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் குறித்த உத்தியோகத்தருடன் தொடர்புபட்ட உத்தியோகத்தர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...