புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடாவிட்டால் நடவடிக்கை

- இ.போ.சக்கு பொலிஸ், மாநகர முதல்வர் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அரச தனியார் நெடுந்தூர பேருந்து தரிப்பிடத்திலிருந்து இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் சேவையிலிடுபட வேண்டும் என மாநகர சபையால் அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கு இ.போ.ச சாரதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் மேற்படி சேவையில் ஈடுபடாத இ.போ.ச சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பரிசோதகரும், யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணனும் எச்சரித்துள்ளனர்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் நேற்று காலையிலிருந்து தனியார் துறையினர் சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுவதை புறக்கணித்தன.

இதனையடுத்து இ.போ.ச மத்திய பேருந்து நிலையத்திற்கு பொலிசாருடன் சென்ற மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள், நடத்துனர்களுக்கு குறித்த விடயத்தினை தெளிவுபடுத்தி, நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து தான் வெளி மாவட்டத்திற்கான சேவைகள் நடைபெறும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதற்கு, தமது உயர் மட்டத்திலிருந்து தமக்கு எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை எனவும் விடயம் தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபையின் வட மாகாணத்துக்கு பொறுப்பான அதிகாரி அல்லது சாலை முகாமையாளருடன் தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்துமாறு இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்த யாழ் மாநகர முதல்வர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நெடுந்தூர பேருந்து நிலையம் தொடர்பில் பல்வேறுபட்ட கூட்டங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகளை அழைத்த போதும் அவர்கள் சமூகமளிக்கவில்லை எனவும்,  தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டும் அவர்களுடைய பதிலளிக்கவில்லை எனவே இனியும் அனுமதிக்க  முடியாது.

எனவே நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்துதான் சேவைகள் இடம்பெற வேண்டும். அதனை  தவறும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத்  பெர்னாண்டோ சாரதிகளுக்கு கூறுகையில்,

மாகாண ஆளுநரின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புதிதாக திறக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இன்றிலிருந்து அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறு  வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி குறித்த தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பொலிசாராகிய எமக்குள்ளது. தனியார் பேருந்துகள் நேற்று காலையிலிருந்து சேவையில் ஈடுபட ஆரம்பித்து விட்டன. எனினும் இலங்கை போக்குவரத்து சபையினர் மாத்திரமே சேவையில் ஈடுபடவில்லை.

வடக்கு மாகாண ஆளுநருடன் இடம்பெற்ற பல்வேறுபட்ட கூட்டங்களின் போது இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்ட போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவ்வாறு சேவையை முன்னெடுக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பருத்தித்துறை விசேட, சுண்டுக்குளி நிருபர்கள்


Add new comment

Or log in with...