மாணவர்களின் கல்வி முன்னேற்ற பணியில் இராணுவம் | தினகரன்

மாணவர்களின் கல்வி முன்னேற்ற பணியில் இராணுவம்

உலகில் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்வது கல்வி ஆகும். மனிதன் தான் கற்ற கல்வியறிவின் மூலம் பல்வேறு வகையான சாதனைகளை நிகழ்த்துகின்றான். ஒரு மனிதன் கற்றுக்கொண்ட பயனுள்ள கல்வியானது நவீன உலகில் தயாரிக்கப்படும் அதிநவீன ஆயுதங்களை விடவும் சக்தி வாய்ந்தது. இதனால்தான் தென்

ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா ‘கல்வியானது இந்த உலகத்தையே மாற்றக் கூடிய ஒரு மிக சக்தி வாய்ந்த ஆயுதமாகும்’ எனக் கூறியுள்ளார்.

வாழ்வில் பயனளிக்கும் கல்வியைத் தொடர அனைவராலும் முடிவதில்லை. இதற்கு பிரதான காரணம் வறுமை. இவ்வுலகில் பல திறமையான மாணவர்கள் இருந்தாலும் கூட அவர்களின் வறுமை நிலைமை காரணமாக தங்களது திறமைகளை வெளிக்கொணர அவர்களால் முடிவதில்லை.

இதனை நன்கு அறிந்து கொண்ட இலங்கை இராணுவமானது, பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் எண்ணக்கருவின் கீழ், நாட்டில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவித்து, அவர்களின் திறமைகளை இவ்வுலகிற்கு வெளிக்கொணரும் முகமாக, பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்வி சார்ந்த சமூக நலன் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அத்திட்டங்களில் மிக முக்கியமாக வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்குதலை இங்கு குறிப்பிடலாம். ஏனென்றால் ஒரு மாணவன் தனது கற்றலைத் தொடர்வதற்கு பிரதான தடையாக காணப்படுவது கற்றல் வளங்கள் இன்மையேயாகும். அதன் பிரகாரம், பொலனறுவை மதுதமன மாதிரி ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான கற்றல் மற்றும் ஏனைய உபகரணங்கள் படையினரால் இம்மாதம் 20 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

படையினரின் ஒருங்கிணைப்பில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் அப்பியாசப் புத்தகங்கள் வவுனியா குடாகச்சகுடிய மற்றும் மூன்றுமுறிப்பு ஆரம்பப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.

படையினர் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் 350 வறிய மாணவர்களுக்கு அண்மையில் கற்றல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கியதோடு, பலுகஸ்வெவ பிரதேசத்திலுள்ள கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் அன்பளிப்புச் செய்தனர்.

படையினரால் தந்திரிமலை பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்கள், புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

படைக்கலச் சிறப்பணியின் ஓய்வு பெற்ற கேர்ணல் காமினி பாலசூரிய மற்றும் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் அவரது குடும்பத்தினரிடமிருந்து கிடைக்கப் பெற்ற நிதியுதவியினைக் கொண்டு அண்மையில் தி/ பரணமெதவாச்சிய ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஏராளமான புத்தகங்கள் மற்றும் ஏனைய பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

அதற்கு மேலதிகமாக மாணவர்களின் நலன் கருதி, இராணுவத்தினரால் பாடசாலைகளில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் பிரகாரம், இலங்கை பொறியியல் படையினரால் ரத்தபலாகம ஹம்பேகமுவ கனிஷ்ட பாடசாலையின் மைதானத்தை புனரமைக்கும் பணிகள் ஜனவரி 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், தெரணியகல மாலிபொட பொத்தெணிகண்ட மகாவித்தியாலயத்தின் மைதானத்தை புனரமைக்கும் பணிகள் பெப்ரவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வாறு நாட்டில் பல பாகங்களிலும் கல்வியின் பொருட்டு இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அளப்பரிய சேவையானது இந்நாட்டு மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எம்.எஸ்.எம். நஜாத்


Add new comment

Or log in with...