மைத்திரிக்கு எதிரான நடவடிக்கைக்கு பரிந்துரை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மாஅதிபர் மீதும் நடவடிக்ைக

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயுமாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணாந்து, முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் தமது பொறுப்பை நிறைவேற்ற தவறியுள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை ஜனாதிபதி, அமைச்சரவை என்பவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்ட போது 2019 ஏப்ரல் 16 முதல் 21 வரை இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு விஜயம் செய்தார்.

அந்த சமயம் பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்காததன் மூலம் அவர் தமது பொறுப்பை மீறியுள்ளதாகவும் அதற்கமைய வேண்டுமென்றே சஹ்ரான ஹாசிம் உள்ளிட்ட பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுக்கு வழியமைத்திருப்பதன் மூலம் அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணாந்து,முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தேசிய புலனாய்வு முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ், அரச புலனாய்வு பணிப்பளார் நிலந்த ஜெயவர்தன உள்ளிட்ட நபர்கள் தாக்குதலை தடுக்க தவறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவால் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நபர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபர் ஆராய வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...