வைத்தியத் துறையில் புரட்சிகர சிந்தனைகள் கொண்ட டொக்டர் நெவில் பெனாண்டோ

தென்னிலங்கையில் பாணந்துறை மற்றும் அயல் பிரதேச மக்களின் அன்பையும் நல்லெண்ணத்தையும் வென்றவராகவும், சாந்தமான சுபாவம் கொண்டவராகவும் பாணந்துறை தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் டொக்டர் நெவில் பெர்ணான்டோ விளங்குகின்றார். அவர் பிரபல தனியார் வைத்தியசாலையொன்றின் தலைவர் மாத்திரமன்றி, மக்கள் மனம் வென்ற சிறந்த மக்கள் சேவகராகவும் திகழ்ந்தார்.

கொழும்புக்கு வெளியே தெற்கில் காலி வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள தனியான ஒரேயொரு பெண்கள் மற்றும் மகப்பேற்று மருத்துவமனையின் முன்னோடி அவராவார். பாணந்துறை மக்களின் மனதில் மறக்க முடியாத இடம்பிடித்த அன்னார் தனது 89 ஆவது வயதில் கடந்த பெப்ரவரி நான்காம் திகதி காலமானார்.

பாணந்துறை சுமங்கல கல்லூரியின் கீர்த்திமிகு பழைய மாணவரான இவர், அரசாங்க வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய பின்னர் தனியார் மருத்துவ சேவையில் ஈடுபட்டார். இவர் நோயாளிகளுக்கு மனிதநேய நெறியில் சிகிச்சையளித்தார். பிரதேச மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவைகளையும் வழங்கியுள்ளார். இவர் சாதாரண மக்களின் துன்பம், வறுமை தொடர்பில் கரிசனை கொண்ட நேர்மையான பிரஜையாக விளங்கினார். சிறந்த குணாதிசயம் மற்றும் மனிதநேய பண்பாடுகள் காரணமாக மக்களின் பாசத்தை பெற்றுக் கொண்டார்.

1977 இல் இவர் பாணந்துறை தொகுதியில் ஐ.தே.க சார்பில் களமிறங்கினார். இலங்கையின் பிரபல இடதுசாரி அரசியல்வாதிகளில் ஒருவரான மறைந்த முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லெஸ்லி குணவர்த்தனவுடன் முதல் அரசியல் பலப்பரீட்சையில் இறங்கிய டொக்டர் நெவில் பெர்னாண்டோ, பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

இவர் 1977முதல் 1989 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். பாணந்துறை றோயல் வித்தியாலயம், அகமெதி பாலிகா வித்தியாலயம் உள்ளிட்டவை இவரது பணிகளின் அடையாளங்களாகும். பாணந்துறை நகர்ப் பகுதியில் மோதரவில சேற்றுப் பகுதியை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்து சிறந்த கைத்தொழில் பேட்டையாக உருவாக்கியமை அன்னாரது பிரதான சேவைகளில் ஒன்றாகும். இன்று ஆயிரக்கணக்காணவர்கள் இங்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

அப்போதைய எதிர்க் கட்சித் தலைவராக இருந்த மறைந்த அ. அமிர்தலிங்கம் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட விடயம் தொடர்பில் மறைந்த ஜே.ஆர்.ஜயவர்தனவுடன் இவருக்கு கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் இவரின் அரசியல் பயணத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. திசைமாறல்களும் நிகழ்ந்தன. ஆனாலும் தொகுதி மக்களின் ஆசியுடன் வெற்றி கண்டார். பின்னர் நாட்டில் அறிமுகமான மாவட்ட விருப்பு வாக்கு தேர்தல் முறையில் விருப்பம் காணாத அன்னார், அரசியல் பாதையைக் கைவிட்டு வர்த்தக மற்றும் வைத்திய அபிவிருத்தித் துறைகளின் பக்கம் திரும்பினார்.

1989ஆம் ஆண்டு நாட்டில் ஜே.வி.பி போராட்டம் இடம்பெற்ற காலமாகும். அன்னாரின் பாணந்துறை இல்லத்தில் 1989 இல் இடம்பெற்ற தாக்குதலில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியதுடன், அவரது பிரபல ஆதரவாளர்கள் பலர் உயிரிழந்தனர்.

இவற்றைக் கண்டு மனம் தளராத டொக்டர் நெவில் பெர்னாண்டோ, 1995 காலப் பகுதியில் இலங்கையில் பிரபல அச்சக தொழில்துறையை ஆரம்பித்து தேசத்தின் கைத்தொழில் துறைக்கு உந்துசக்தியாக விளங்கியதுடன், ஆயிரக்கணக்கானோருக்கு தொழில் வாய்ப்பும் பெற்றுக் கொடுத்தார்.

வைத்தியத்துறை சேவையின் பக்கம் மீண்டும் திரும்பிய அவர், கொழும்பு ஆஷா சென்ரல் வைத்தியசாலையை கொள்வனவு செய்து பாரிய தனியார் வைத்தியசாலைப் பணியை ஆரம்பித்தார். இந்த வைத்தியசாலையை முறையாக அபிவிருத்தி செய்து மக்களுக்கான தனியார் வைத்திய பணியைத் தொடர்ந்தார்.

வெளிநாட்டுக்குச் செல்லும் பணம் மற்றும் அறிவுசார் வளங்களை தேசத்துக்குள் முடக்கும் நோக்கில் பிரபல ஆஷா சென்றல் வைத்தியசாலையை விற்பனை செய்து விட்டு பல்வகை கல்விக்கான தனியார் பல்கலைக்கழகமொன்றை மாலபேயில் ஆரம்பித்தார். இதுதான் பெயர் பெற்றதும், நாட்டில் பாரிய கருத்தாடல்களுக்கும் சர்ச்சைகளுக்குள்ளானதுமான சைற்றம் தனியார் பல்கலைக்கழகமாகும்.

அங்கு வைத்தியம், பொறியியல், முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட மற்றும் பல துறைகளில் பட்டப்படிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் தொடர்புபட்ட பாரிய நிறுவனமொன்றாகவும் அது விளங்கியது.

மேலும் ஆயிரம் படுக்கைகளுடன் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையையும் அப்பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் நிர்மாணித்தார். இன்று இந்த வைத்தியசாலை அரசுடைமையாக மாறியுள்ளது.

சிரேஷ்ட மக்கள் சேவகர்களின் இறுதிப் பயணத்தைக் கூட முறையான கௌரவத்துடன் நிறைவேற்ற முடியாத நிலைமை கொரோனாவினால் தோற்றுவிக்கப்பட்டுள்ளமை துரதிருஷ்டவசமானதாகும்.   

எம்.எஸ்.எம்.முன்தஸிர்...
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...