கொவிட்-19 வைரஸுக்கு பலியான இலங்கையின் முதல் வைத்தியர்

இலங்கையில், கொவிட்-19 தொற்று காரணமான முதலாவது வைத்தியரின் மரணம் பதிவாகியுள்ளது.

ராகமை வைத்தியசாலையில் கடமையாற்றும் 32 வயதான, வைத்தியர் கயான் தந்தநாராயண என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

திருமணமான இவர், கராபிட்டி போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

ராகமை பிரதேசத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கும், அங்கிருந்து கராபிட்டி போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டிருந்தார்.

நுகேகொடை லைசியம் சர்வதேச பாடசாலையில் கல்வி கற்ற கயான் தந்தநாராயண, சீனாவின் ரியான்ஜின் மருத்துவ பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவ கற்கையை நிறைவு செய்து, இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வைத்தியராக தெரிவானார்.

அதனைத் தொடர்ந்து, ராகமை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த அவர், கொரோனா தொற்றுக்குள்ளானார்.

அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 நியூமோனியா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் ஆஸ்த்துமா நோய் நிலை காரணமாக, நுரையீரல் பாதிப்படைந்ததைத் தொடர்ந்து அவரது நோய் நிலை உக்கிரமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கராபிட்டிய வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.

கொவிட்-19 தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 323 மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இவரது மரணத்தை அடுத்து, இதுவரை இலங்கையில் 324 கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.


Add new comment

Or log in with...