ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிரிக்கெட் வீரர்கள் இருவர் குற்றவாளிகள் -ஐசிசி அறிவிப்பு | தினகரன்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிரிக்கெட் வீரர்கள் இருவர் குற்றவாளிகள் -ஐசிசி அறிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிரிக்கெட் வீரர்களான மொஹம்மத் நவீத், ஷய்மான் அன்வர் ஆகிய இருவரும் ஆட்டநிர்ணய விடயத்தில் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) யின் சுயாதீன மோசடி தடுப்புப் பிரிவினால் நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே இந்த வீரர்கள் இருவரும் ஆட்டநிர்ணய குற்றவாளிகளாகக் காணப்பட்டனர்.

இவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடரும் எனவும் தண்டனைகள் குறித்து உரியவேளையில் அறிவிக்கப்படும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின்போது மோசடியில் ஈடுபடுவதற்கு முயற்சித்தார்கள் என சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2019இல் குற்றஞ்சாட்டப்பட்டது. இது இவ்வாறிருக்க, ரி 10 லீக் கிரிக்கெட் போட்டிகளின்போது ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் இரண்டு விதிகளை மீறியமைக்காகவும் நவீத் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

39 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 31 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ள நவீத், இருபது 20 உலகக் கிண்ணம் மற்றும் ரி10 லீக் ஆகிய போட்டிகளின்போது ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக நான்கு விடயங்களில் ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ஷய்மான் மீது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின்போது இரண்டு விடயங்களில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. சாட்சியாளர்களுக்கும் நவீத்துக்கும் இடையில் வட்ஸ்அப்பில் பரிமாறிக்கொள்ளப்பட்ட தகவல்களில் ஆட்ட நிர்ணயத்துக்காக ஆயிரக்கணக்கான டொலர்கள் பேரம் பேசப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


Add new comment

Or log in with...