பாட்ரிஸ் லுமும்பா; எழுச்சியும் படுகொலையும்

ஜனவரி 17ஆம் திகதியுடன், ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள கொங்கோவின் தேச விடுதலை நாயகன் பாட்ரிஸ் லுமும்பா படுகொலை செய்யப்பட்டு 60 ஆண்டுகள் கடந்து விட்டன. அவர் கொங்கோவிலுள்ள கடாங்கா மாகாணத்தில், கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரைப் படுகொலை செய்த புனிதக் கூட்டணி, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, பெல்ஜிய அரசு, கொங்கோவை சூறையாடிய சுரங்க நிறுவனங்கள் மற்றும் மக்களை கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற கூலிப்படைகள் என நீள்கின்றது. அறுபதாண்டுகள் கழிந்தும் மாறாத வடுக்களினால், ஆபிரிக்காவில் லுமும்பாவை நினைவு கூருவோரின் நம்பிக்கை தொலைத்த விழிகளில், இழப்பின் துயரத்தையும், ஆத்திரத்தையும் நாம் இன்றும் காணலாம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மைக் ஈலி என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை பாட்ரிஸ் லுமும்பா நினைவாக வெளியிடப்படுகின்றது. 1960 ஆம் ஆண்டு ஜூலை 30ந் திகதி, உலகம் முழுவதும் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடி வந்த கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை தரும்நாளாகவிருந்தது. 'பெல்ஜியன் கொங்கோவின்' மக்களை ஈவிரக்கமின்றி சுரண்டிக் கொழுத்த பெல்ஜிய காலனியாதிக்கவாதிகள், தாது வளம் நிறைந்த மண்ணை விட்டு வெளியேறவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கவுமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். கொங்கோ எனும் குடியரசு மலர்ந்தது, அதன் தலைவர்களில் ஒருவர்தான் பாட்ரிஸ் லுமும்பா!

காலனிய எதிர்ப்பு கனன்று கொண்டிருந்த, துடிப்பு மிக்க இளம் அரசியல்வாதி. லியோபோல்ட்வில்லேயில் (இன்றைய கின்ஷாசா) நடைபெற்ற விழாவில், பெல்ஜியத்தின் அரசன் ஒன்றாம் பதோயின் நேரடியாக கலந்து கொண்டு, கொங்கோ சுதந்திரம் பெற்று விட்டதை அறிவிக்க வந்திருந்தான். அவ்விழாவில்,காலனியாதிக்கவாதிகளும், அடிமைப்பட்டவர்களும் தமக்குள் ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொண்டு, முன்பு போலவே எதுவும் மாறாமல் தொடரும் நோக்கத்துடன், பரஸ்பரம் ஒருவரையொருவர் புகழ்ந்து தள்ளுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெல்ஜிய அரசர் திமிரோடு தமது உரையில் கூறினார்:

'கனவான்களே, நீங்கள் நம்பிக்கை வைக்கத் தகுந்தவர்கள் என நிரூபிப்பது இனி உங்கள் பொறுப்பு!' புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் லுமும்பா மேடைக்கு வந்து பேசத் துவங்கியவுடன் தான், அரங்கில் அமர்ந்திருந்த கொங்கோ மக்கள் எழுச்சியும், உற்சாகமும் கொள்ளத் துவங்கினர். அவரது ஆற்றொழுக்கான உரை வானொலி மூலம் ஒலிபரப்பப்பட்டது. பெல்ஜியர்களின் கீழ் மக்கள் அனுபவித்த இன்னல்களையும், எதிர்காலத்திற்கான தமது எண்ணங்களையும் லுமும்பா எடுத்துரைத்தார். பெல்ஜிய அரசர் பேயறைந்தது போல உறைந்து போனார். லுமும்பா கூறினார்: 'எண்பதாண்டுகளாக, காலனிய ஆதிக்கத்தின் கீழ், எமது தலைவிதி இப்படித்தான் இருந்தது. எமது காயங்கள் காலங் கடந்தவையல்ல. அவை தாங்கொணாத வலி கொண்டவை. எனவே, இன்னமும் எங்களது மனங்களிலிருந்து அவை அகன்று விடவில்லை. மிகக் குறைவான கூலிக்கு முதுகு தேய நாங்கள் வேலை செய்திருக்கிறோம்.

ஒருபோதும் நாங்கள் வயிறார உண்ண முடிந்ததில்லை. பட்டினிச் சாவுகளை தடுக்க இயன்றதில்லை. நாங்கள் நல்ல உடைகளை அறிந்ததில்லை. வசிக்கத்தக்க வீடுகளில் வசித்ததில்லை. எமது அருமைக் குழந்தைகளை நேசித்து வளர்க்க முடிந்ததில்லை. காலையும், மதியமும், மாலையும், இரவும் என ஒவ்வொரு நாளும் நாங்கள் பீதியூட்டப்பட்டோம், இழிவுபடுத்தப்பட்டோம், கடுமையாகத் தாக்கி ஒடுக்கப்பட்டோம், ஏனெனில் நாங்கள் கறுப்பர்கள்... வல்லான் வகுத்ததே நியாயம் என அங்கீகரிக்கும் சட்டங்களின் மூலம், சட்டப்பூர்வமான வழிகளில் எமது நிலங்கள் எமது கண்களுக்கு முன்பாக ஆக்கிரமிக்கப்பட்டன.

சட்டம் வெள்ளையனுக்கு இணக்கமாகவும், கறுப்பனுக்கு குரூரமானதாகவும், மனிதத் தன்மையற்றதாகவும் விளங்கும், அது ஒரு போதும் சமமாக இராது என்பதைக் கண்கூடாகக் கண்டறிந்தோம். தமது அரசியல் அல்லது மதக் கருத்துக்களுக்காக கண்டனம் செய்யப்பட்டு, சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்க நேர்ந்தவர்களை நாங்கள் அறிவோம். அவர்கள் தமது சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டவர்கள் மரணத்தை விடவும் கொடியது அவர்களது நிலை. நகரங்களில் வெள்ளையர்கள் தமது மாடமாளிகைகளில் வீற்றிருக்க, கறுப்பர்களாகிய நாங்கள் இடிபாடுகளில் வசித்து வந்திருக்கிறோம். நாங்கள் திரை அரங்குகளிலோ, உணவு விடுதிகளிலோ, ஐரோப்பியர்களின் கடைகளிலோ ஒரு போதும் அனுமதிக்கப்பட்டதில்லை. வெள்ளையர்கள் தமது சொகுசு கேபின்களில் பயணம் செய்ய, அவர்களது காலடிகளில், ரயிலின் வாசல்களில் நின்று நாங்கள் பயணம் செய்திருக்கிறோம். இந்த அடக்குமுறையும், சுரண்டலும் உருக்கொண்ட அரசை எதிர்த்து நின்ற, எமது எத்தனையோ சகோதரர்கள் வெஞ்சிறைகளில் தள்ளப்பட்டதை, உருத்தெரியாமல் கொன்று ஒழிக்கப்பட்டதை நாங்கள் எவ்வாறு மறக்க முடியும்? சகோதரர்களே, இவையனைத்தையும் நாங்கள் சகித்திருக்கிறோம். ஆனால்,

உங்களது ஓட்டுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், இன்று நமது நாட்டை வழிநடத்தும் பொறுப்பை எங்களுக்கு அளித்திருக்கிறார்கள். காலனிய ஒடுக்குமுறையால், மனதாலும், உடலாலும் நொறுக்கப்பட்ட நாங்கள் உங்களுக்கு உரக்கவும், உறுதிபடவும் கூற விரும்புகிறோம். நான் கூறிய ஒடுக்குமுறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டன. கொங்கோ குடியரசு அறிவிக்கப்பட்டு விட்டது, நமது நாடு தற்பொழுது அதன் சொந்தக் குழந்தைகளின் கரங்களில் உள்ளது.' கடந்த காலம் குறித்த லுமும்பாவின் சொற்கள் உண்மையே. ஆனால், எதிர்காலம் குறித்த அவரது சொற்கள் உண்மையாகவில்லை.

உண்மையில், நாடு 'அதன் சொந்தக் குழந்தைகளின் கரங்களில்' இன்னமும் வந்து சேர்ந்திருக்கவில்லை.

அதிகாரப்பூர்வமான சுதந்திரம் என்ற நாடகத்தின் பின்னே, பெல்ஜியத்தின் இராணுவ அதிகாரிகள் கொங்கோவின் இராணுவத்தையும், காவல்துறையையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சுரங்க நிறுவனங்கள் நாட்டின் வளங்களையும், ஊழல் அரசியல்வாதிகளையும் தமது கரங்களில் வைத்திருந்தனர். அமெரிக்காவின் சி.ஐ.ஏ, பெல்ஜிய உளவுத்துறை மற்றும் இதர ஏகாதிபத்திய நாடுகளது உளவுத் துறை நிறுவனங்களின் ஏஜெண்டுகள், ஏகாதிபத்திய விசுவாசிகளின் கரங்களில் அதிகாரம் உறுதியோடும், நிரந்தரமாகவும் நிலைத்திருப்பதற்கான சதிவேலைகளில் மும்முரமாக ஈடுபட்டார்கள். பதவியேற்ற இரு நூறு நாட்களில் பாட்ரிஸ் லுமும்பா ஏகாதிபத்திய ஏஜெண்டுகளால் படுகொலை செய்யப்பட்டார்.

கொங்கோவில் நடந்த நிகழ்வுகள் உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட நாடுகளின் மக்களின் இதயத்தை உலுக்குவதாக இருந்தன. தேச விடுதலையின் அடிப்படையிலான புதிய சமுதாயம் எனும் வெற்றியை சாதிப்பதற்கு, மக்கள் படையும், புரட்சிகரப் பாதையும் இன்றியமையாதவை எனும் உண்மையை, கோடிக்கணக்கான மக்களுக்கு கொங்கோவில் நடைபெற்ற நிகழ்வுகள் உணர்த்தின.

இன்று, 40 வருடங்களுக்குப் பிறகும், ஆபிரிக்க நாடுகள் இன்னமும் சுதந்திரமான நாடுகள் என்றே அறியப்படுகின்றன. ஆனால், அந்நாடுகளின் மக்கள் உண்மையான விடுதலைக்காக காத்திருக்கின்றனர். கொங்கோ போரிடும் தரப்புகளுக்கு இடையே துண்டாடப்பட்டுக் கிடக்கிறது. ஒவ்வொரு தரப்பையும் தூண்டி மோத விட்டு, தமது நிழல் யுத்தத்தை ஏகாதிபத்தியங்கள் நிகழ்த்துகின்றன.

லியோபோல்ட்டின் சொத்து மத்திய ஆபிரிக்காவிலிருந்து பாய்ந்தோடும் கொங்கோ நதி, மழைக்காடுகளையும், சவன்னா (வெப்பப் புல்வெளிகள்) வெளிகளையும், 200 வகைப்பட்ட மக்களது நிலங்களையும் கடந்து, ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி அட்லாண்டிக் பெருங்கடலைச் சென்றடைகிறது. அதன் கடற்கரையோரங்களில் நடைபெற்ற 300 வருட அடிமை வர்த்தகத்தைத் தொடர்ந்து, 1885 இல், பெல்ஜிய அரசன் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோ நதிநீர்ப் பெருநிலங்களை தனது தனிப்பட்ட சொத்தாக மாற்றிக் கொண்டான்.

1885 இல் நடைபெற்ற புகழ்பெற்ற பெல்ஜிய மாநாடு அரசனின் அபகரிப்பை அங்கீகரித்தது. அம்மாநாட்டில், ஐரோப்பிய அரசுகள் ஆபிரிக்க மக்களை சுரண்டுவதற்கான தமது உரிமைகளை பரஸ்பரம் அங்கீகரித்துக் கொண்டன. பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்தால் கிடைக்கத்தக்க அளவு பெரிய நிலப்பகுதியை பெல்ஜிய அரசன் பெற்றுக் கொண்டான். அந்த நிலப்பகுதி பெல்ஜியத்தின் மொத்தப் பரப்பை விடவும் 80 மடங்குப் பெரியதாகும்.

தனது நிலப்பகுதிகளுக்கு 'சுதந்திரக் கொங்கோ' என்று பெயரிட்ட அரசன், ஆயுதப் படைச் சாவடிகளின் வலைப்பின்னலையும், அடிமை உழைப்பு முகாம்களையும் கட்டியமைத்தான். முதலாளித்துவமும், காலனியாதிக்கவாதமும்தான் எத்தனை முறை 'சுதந்திரம்' என்ற சொல்லை வக்கிரமான முறையில் திரித்துப் புரட்டியிருக்கின்றன?

பெல்ஜிய அரசனின் அடிமை உழைப்பு முகாம்களில் ஆபிரிக்க மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர வன்முறைகள்தான், வரலாற்றில் இதுகாறும் பதிவு செய்யப்பட்ட சித்திரவதைகளிலேயே மிகக் கொடூரமானதும், இதயத்தை நடுங்கச் செய்வதுமாகும்.

இத்தகைய முகாம்களில் அடிமைகளின் கடும் உழைப்பில் விளைந்த ரப்பர், வெட்டு மரங்கள், பாமாயில் ஆகியன பெல்ஜிய மற்றும் அமெரிக்க முதலாளிகளை பணத்தில் கொழிக்க வைத்தன. இச்சுரண்டலில், குக்கென்ஹெய்ம், மார்கன் மற்றும் ராக்ஃபெல்லர் முதலான அமெரிக்க முதலாளிகள் முக்கிய பங்கு வகித்தனர். இத்தகைய கொலைகார நடவடிக்கைகளின் விளைவாக, இருபது வருடங்களில் கொங்கோவின் மக்கள் தொகை இரண்டரைக் கோடியிலிருந்து ஒரு கோடியாகக் குறைந்தது.

1908 ஆம் ஆண்டு, கொங்கோ மக்களின் கலகங்களைத் தொடர்ந்து, பெல்ஜிய ஆளும் வர்க்கம் தனது விலையுயர்ந்த காலனியின் மீதான ஆட்சி முறையை மாற்றியமைத்தது. நேரடி நிர்வாகத்தை அரசே எடுத்துக் கொண்டு, நாட்டுக்கு 'பெல்ஜியன் கொங்கோ' என பெயர் சூட்டியது.

இதனைத் தொடர்ந்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் 'பெல்ஜியன் கொங்கோவில்' நடந்தேறின.

ஏனெனில், கொங்கோவின் தென்கோடியில் தனித்திருந்த கடாங்கா மாகாணத்திலுள்ள தாமிர வயல்களையும், கசாய் மாகாணத்திலுள்ள வைர வயல்களையும் காலனியாதிக்கவாதிகள் சுரண்டத் துவங்கினர்.

இரண்டாம் உலகப் போர் (1939-1945) காலகட்டத்தில், ஏகாதிபத்தியப் போர் நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்களுக்கும், உலகின் மொத்த கோபால்ட்டில் 65 சதவிகிதத்திற்கும், இறப்பர், டைட்டானியம் உள்ளிட்ட பொருட்களுக்கும் கொங்கோ தான் மூலாதாரமாக விளங்கியது.


Add new comment

Or log in with...