நுண்கடன் பொறிக்குள் சிக்கியோருக்கு சமுர்த்தி வங்கியினால் துரித நிவாரணம் | தினகரன்

நுண்கடன் பொறிக்குள் சிக்கியோருக்கு சமுர்த்தி வங்கியினால் துரித நிவாரணம்

நுண்கடன் பொறிக்குள் சிக்கியுள்ள 93% வீதமான பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமுர்த்தி வங்கியால் துரித கதியில் நிவாரணம் வழங்கும் திட்டத்தினை நாடு முழுவதும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் போது கிராமிய ஏழை மக்களினால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வகையில் நிவாரணம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் நிகழ்வு அன்மையில் வரலாற்று சிறப்பு மிக்க அநுராதபுரத்தில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அநுராதபுரம் மாவட்டத்தின் மிஹிந்தலை, திறப்பனை மற்றும் அநுராதபுரம் சாலியபுர சமுர்த்தி வங்கிகளில் கடன் பெற்றுக் கொளவது சம்பந்தமாக தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு கூட்டங்களும் இடம்பெற்றன. இம்மாவட்டத்திலுள்ள 54 சமுர்த்தி வங்கிகளின் ஊடாக அனைவரையும் தெளிவுபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இனிமேலும் கிராமிய ஏழை மக்கள் இதுபோன்ற மோசமான கடன் பொறிக்குள் சிக்குவதை தவிர்க்கும் முகமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் இவ்விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறைந்த வருமானம் பெறும் கிராமப்புற மக்களுக்கு நுண்கடன்கள் பெரும் சிக்கலானவை ஆகும். சமுர்த்தி வங்கி என்பது சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டுமே பயனளிக்கும் வங்கியென்பதை பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்கின்றனர். ஆனால் அது சமுர்த்தி பெறுபவர்களுக்கு மட்டுமல்ல, தொழில் செய்யக் கூடிய, ஒரு தொழிலை நடத்தக் கூடிய அனைவருக்கும், குறைந்த வருமானம் உடையவர்களுக்கும் பயன் தருவதாகும். தொழில் முயற்சியாளர்கள் அந்த வங்கி அமைப்பில் இணைய முடியும்.மக்களை மையமாக கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது மட்டுமின்றி அதனை சரியாக நிறைவேற்றும் வேலைத் திட்டத்தினையும் ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனைப்படி ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுமக்களுடன கலந்தாலோசித்து பொதுமக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினை தொடர்பில் கொள்கைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.அவை பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும். நுண்கடன் பிரச்சினைக்கு முகம் கொடுத்தவர்களில் 93% வீதமானவர்கள் பெண்கள். இப்பிரச்சினையில் அரசாங்கம் தலையிடாவிட்டால் அவர்கள் இன்னும் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகும்.

அதனை தடுக்கும் நோக்கில் குறைந்த வட்டி வீதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 20 இலட்சம் சமுர்த்தி பயனாளி குடும்பங்களை வலுவாக்கும் பணிகளை இந்த ஆண்டில் முன்னெடுப்பதற்கான சகல திட்டங்களும் ஏற்கனவே மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆதம்பாவா பிர்தெளஸ
(அநுராதபுரம் தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...