உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எனது இறுதித் தீர்மானங்கள் அமையும் | தினகரன்

உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எனது இறுதித் தீர்மானங்கள் அமையும்

கடற்றொழிலாளர் போராட்ட களத்தில் அமைச்சர் டக்ளஸ்

கடற்றொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தான் எனது ஒவ்வொரு செயற்பாடுகளும் அமையும். அதை நீங்கள் நம்புங்கள். நான் ஏற்கனவே கூறியதுபோல விரைவான நீடித்த வாழ்வாதார ஏற்பாடுகளை நிச்சயம் செய்து தருவேன். அதற்கு நீங்கள் எனக்கு ஆதரவாகவும் பக்க பலமாகவும் இருக்க வேண்டுமென  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்திய இழுவைப்படகு விவகாரம் ஒரு பாரிய பிரச்சினையாகத்தான் உள்ளது. இதற்கு எமது அரசு இந்த ஆண்டு முடிவதற்குள் நிச்சயம் தீர்வு பெற்றுத்தருமென நான் நம்பகின்றேன் என்று அமைச்சர் உறுதி வழங்கியிருந்தார். இந்திய மீனவர்களின் அத்துமீறிய, தடைசெய்யப்பட்ட மற்றும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளால் தாம் நாளாந்தம் எதிர்கொண்டுவரும் இடர்பாடுகள் தொடர்பில் வடமாகாண கடற்றொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தினர்.

இதன்போது யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு முன்னால் பேரணியாக வந்து ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் அமைச்சரிடம் தங்களது பிரச்சினைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர். அத்துடன் தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கோரினர். இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், கடற்றொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டுதான் எனது ஒவ்வொரு செயற்பாடுகளும் அமையும். அதை நீங்கள் நம்புங்கள்.

நான் ஏற்கனவே கூறியதுபோல விரைவான நீடித்த வாழ்வாதார ஏற்பாடுகளை நிச்சயம் செய்து தருவேன். எனது இந்த முயற்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் கடற்றொழிலாளர்களாகிய சகலரது ஒத்தழைப்பும் ஒத்தாசையும் கிடைக்கவேண்டுமென்றும், அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் கடற்றொழில் அமைச்சராகிய என்னால் நீங்கள் எதிர்கொள்ளும் சகலவிதமான பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வை பெற்றுத்தரமுடியுமென்றும் உறுதிமொழி வழங்கினார்.


Add new comment

Or log in with...