விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

- விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் சார்பில் நேற்று நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினமான நேற்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

டிராக்டர் செல்ல தனியான வழித்தடத்தை டெல்லி போலீஸார் உருவாக்கி இருந்தனர். ஆனால், விவசாயிகளில் ஒரு பிரிவினர் மத்திய டெல்லிக்குள் போலீஸாரின் தடையை மீறி நுழைந்தனர்.

இதில் பொலிஸாருக்கும், விவசாயிகளில் ஒரு பிரிவினருக்கும் பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர்.

டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், சுதந்திரதினத்தன்று பிரதமர் மோடி பேசும் இடத்தில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்.

டெல்லியில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவங்களில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீஸார் சார்பில் 22 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் டெல்லி டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 3 ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:​

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஓய்வு பெற்ற இரு உயர் நீதிமன்ற நீதிபதிகள் என 3 பேர் அடங்கிய விசாரணை ஆணையம் அமைத்து, டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் தேவையான ஆதாரங்களைத் திரட்டி, சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாக்குமூலம் பெற்று, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

கடந்த 2 மாதங்களாக அமைதியாகச் சென்ற விவசாயிகள் போராட்டம் திடீரென டிராக்டர் பேரணியில் வன்முறை நடந்துள்ளது. துரதிருஷ்டமாக ஏராளமானோர் காயமடைந்துள்ளனர், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வன்முறை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டு, பல்வேறு அரசின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு விதமான பணிகளைச் செய்யவும் இன்டர்நெட் அத்தியாவசியமானது. உச்ச நீதிமன்றம் பணியாற்றவும் இன்டர்நெட் அவசியமானது.

குடியரசு தினத்தன்று விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த மோதல் உலகளவில் கவனத்தை ஈர்த்துவிட்டது. இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது என்பது தெரிவிக்கிறேன்.

அமைதியாக சென்ற போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்துள்ளது, எவ்வாறு போராட்டம் வன்முறையாக மாறியது, வன்முறைக்கு யார் காரணம், இந்த அமைதியின்மையை யார் உருவாக்கியது, பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகளை என்பதை விசாரிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் விவசாயிகளும், மத்திய அரசும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுகிறார்கள். ஆதலால், சுயாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புதான் இதில் விசாரணை நடத்த வேண்டும். ஆதலால் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...