சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் எழுச்சிப்பேரணி

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு

சுதந்திரத் தினத்தன்று வடக்கு கிழக்கு தழுவிய எழுச்சிப் பேரணிகளை நடத்தவுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில், “பெப்ரவரி நான்காம் திகதி தமிழர்களின் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத நாளாகும். எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதி, வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சியில் காலை 8.30 மணிக்கு கந்தசுவாமி ஆலைய முன்றலில் பேரணி ஆரம்பமாகும். கிழக்கு மாகாணம் சமநேரத்தில், மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூங்காவைச் சென்றடையும்.

இப்பேரணிக்கு மத குருக்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரும் தங்களது ஆதரவை வழங்கி சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி சர்வதேச விசாரணைக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் வேண்டி நிக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...