கொவிட்–19: சீனத் தலைநகரில் பகுதி அளவான முடக்கநிலை | தினகரன்

கொவிட்–19: சீனத் தலைநகரில் பகுதி அளவான முடக்கநிலை

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பகுதி முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் வாழும் 1.6மில்லியன் மக்கள் நகரை விட்டு வெளியேறக்கூடாது என சீன அரசாங்கம் தடை விதித்துள்ளது. 

தற்போதைய நிலையில் பெய்ஜிங்கின் தெற்கு வட்டாரம் ஒன்றில் ஏழு பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் சிறப்பு அனுமதி பெற்றாலன்றி அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாது.  

அத்துடன், அவர்கள் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக வைரஸ் பரவல் சோதனை செய்து கொண்டு தொற்று இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். 

மேலும், அவ்வட்டார மக்களில் 50பேருக்கு மேல் ஒன்றுகூட அனுமதியில்லை. அங்கு நடப்பதாக இருக்கும் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திப் போடப்பட்டுள்ளன. இறந்தவர்களை அடக்கம் செய்யும் நடைமுறையை சுருக்கமாக வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

சீனப் புத்தாண்டு விடுமுறை காலம் வரவுள்ள நிலையில், சீனாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் அதிக அளவில் வைரஸ் தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. 

நோய்ப்பரவல் மீண்டும் தலைதூக்குவதைத் தவிர்க்க, சீனப் புத்தாண்டில் போது பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.


Add new comment

Or log in with...