பசறை பாடசாலையொன்றில் 6 மாணவ, மாணவியர்க்கு கொரோனா

பசறை பாடசாலையொன்றில் 6 மாணவ, மாணவியர்க்கு கொரோனா-6 Students From Passara Area Schools Tested Positive For COVID19

பசறை பிரபல பாடசாலையொன்றின் ஆறு மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக, பி.சிஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் இன்று (22) தெரியவந்துள்ளது.

பசறை மற்றும் லுணுகலை பிரதேச பொதுச் சுகாதாரப் பணியகத்தினர் இதனைத் தெரிவித்தனர்.

பசறை பொது சுகாதாரப்பிரிவைச் சேர்ந்த மூன்று பேரும், லுணுகலை பொது சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த மூன்று பேருமாக ஆறு மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த ஆறு மாணவர்களும் மேற்படி பாடசாலையில் கல்வி கற்று வரும் 16 மற்றும் 17 வயதுடையவர்கள் எனவும், இவர்களில் நான்கு மாணவர்களும் இரு மாணவிகளும் அடங்கியுள்ளனர்.

பசறை பிரபல பாடசாலையொன்றில் ஏற்கனவே இருவர் கொரோனா தொற்றாளர்களாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருந்தனர். இதையடுத்து, மாணவ, மாணவியர் பலருக்கு பி.சிஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பரிசோதனை அறிக்கை இன்று வெளிவந்தபோதே, மேற்படி மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இக்கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படதைத் தொடர்ந்து, பசறைப் பிரதேசத்தில் மொத்தமாக 40 தெர்றறாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர் குணமடைந்துள்ளனரென்று, பசறை பொது சுகாதாரப்பரிசோதகர் எஸ். நகுலேஸ்வரன் தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட ஆறு மாணவ, மாணவியர்களும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கு, பொது சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

(பதுளை தினகரன் விசேட நிருபர் - எம். செல்வராஜா)


Add new comment

Or log in with...