அமெரிக்க ஜனாதிபதியாக பைடன் இன்று பதவியேற்பு

துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ்

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் இன்று புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர்.

கொரோனா தொற்று மற்றும் வொசிங்டன் டி.சியில் இருக்கும் பாராளுமன்றக் கட்டடத்தில் இந்த மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து கடும் பாதுகாப்புக்கு மத்தியிலேயே சுகாதார கட்டுப்பாடுகளுடன் பதவி ஏற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

தவிர இந்த நிகழ்வுக்கு பதவியில் இருந்து வெளியேறும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். 150 ஆண்டுகளில் இது முதல் முறையாக அமையவுள்ளது.

பதவி ஏற்பு நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்பது தடுக்கப்படாதபோதும், பெருந்தொற்றுக் காரணமாக மக்களை வீட்டில் இருக்கும்படி பைடன் மற்றும் அவரது தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த கால நிகழ்வுகள் போன்று, பென்சில்வேனியா சதுக்கத்தில் அணிவகுப்பு மற்றும் ஒன்றுகூடல்கள் வழக்கம்போல் இடம்பெறவுள்ளன. இதன்படி, வொஷிங்டன் டி.சியில் நடைபெறும் இந்த நிகழ்வில், ஜோ பைடன் அதிகாரபூர்வமாக உறுதிமொழி கூறி அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்வார். இதன்போது ஜோ பைடன் தனது பதவியேற்பு உரையை நிகழ்த்துவார்.

இந்த நிகழ்வில் சுமார் 200 பேர் சமூக இடைவெளியை பின்பற்றி மேடையில் அமர்ந்திருப்பர் என வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இந்த நிகழ்ச்சியை காண சுமார் 2 இலட்சம் டிக்கெட்டுகள் வரை வழங்கப்படும். ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக அது 1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...