கொரோனா தடுப்பு மருந்தின் விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு

வசதி படைத்த நாடுகள் முதலில் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசுஸ் சாடியுள்ளார்.

அத்தோடு, பணக்கார நாடுகளிடம் தங்களின் தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் பெற முந்திக்கொள்ளும் மருந்தாக்க நிறுவனங்களையும் அவர் கண்டித்துள்ளார்.

உலகெங்கும் விநியோகிப்பதற்கான அனுமதியைப் பெற உலக சுகாதார அமைப்பிடம் தகவல்களைச் சமர்ப்பிப்பதே சரியான நடைமுறை என்றார் அவர்.

இல்லையேல் நாடுகள் தடுப்புமருந்தைச் சரிசமமாகப் பெறுவதற்கான வாய்ப்பு பெரிதும் குறையலாம் என்றும் டொக்டர் டெட்ரோஸ் குறிப்பிட்டார்.

ஏழை நாடுகளில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு அது கிடைக்க வேண்டும்; ஆனால் அதற்கு முன்னதாக பணக்கார நாடுகளில் இளைஞர்களும், ஆரோக்கியமானோரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நியாயமானதல்ல என்றும் அவர் சாடினார்.

இதுவரை 39 மில்லியன் தடுப்பூசிகள், வசதிபடைத்த குறைந்தது 49 நாடுகளில் உள்ளவர்களுக்குப் போடப்பட்டுள்ளன. உலகின் மிகக் குறைவான வருமானம் கொண்ட நாட்டில் வெறும் 25 பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது என்றும் அவர் கூறினார்.

உலக நாடுகளின் மனிதநேயக் குறைவினால் ஏழை நாடுகளின் மக்களுக்கு ஆபத்து நேரலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதுவரை சீனா, இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் கொவிட்–19 தடுப்பூசிகளைத் தயாரித்துள்ளன. ஆனால் அவற்றுள் பெரும்பாலான நாடுகள், அவற்றைத் தங்கள் குடிமக்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. இத்தகைய விநியோகச் சிக்கல்கள் ஹெச்1என்1 மற்றும் எயிட்ஸ் நோய்களின் போது செய்யப்பட்ட அதே தவறுகளை மீண்டும் மேற்கொள்வதாகவும், இவ்வித நடவடிக்கைகள் தொற்றுநோய் பரவலை மேலும் அதிகப்படுத்தும் எனவும் கெப்ரியேசுஸ் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா தடுப்பூசி விநியோகத்திற்காக 44 இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், நடப்பாண்டு (2021) இதுவரை 12 இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...