இலங்கையினால் தாங்க முடியாத சுமை மாகாண சபை முறைமை | தினகரன்

இலங்கையினால் தாங்க முடியாத சுமை மாகாண சபை முறைமை

'மாகாணசபை முறைமையானது இலங்கையால் தாங்க முடியாத சுமையாகும்' என்று கூறுகின்றார் நீர்பாசனத்துறை அமைச்சர்சமல் ராஜபக்ஷ.

கேள்வி: மொறகஹகந்த திட்டத்தில் பாதிக்கப்பட்ட சிலருக்கு இன்னும் நஷ்டஈடு கிடைக்கவில்லை அல்லவா? 

பதில்: ஆம் சிலருக்கு நஷ்டஈடு கிடைக்கவில்லை. இவ்வாறான பாரிய திட்டங்களின் போது அவ்வாறு நடைபெறக் கூடும். இன்னும் சிலருக்கு காணிகளும் கிடைக்கவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. மதிப்பீடு செய்பவர்கள் குறைவு எனபதால், மதிப்பீடு செய்ய காலதாமதம் ஏற்படுகின்றது. அதே போன்று நஷ்டஈடு வழங்க காணி உரிமையை உறுதி செய்ய உரிமையாளர்கள் தவறியதும் காரணமாகும்.

கேள்வி: உமா ஓயா அபிவிருத்தியின் தற்போதைய நிலை மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள தீர்வுகள் எவை? 

பதில்: துரித மகாவலித் திட்டமாகவே உமாஓயா திட்டமும் ஆரம்பத்தில் அறியப்பட்டது. ஆனால் நிதியை திரட்ட முடியாததால் உமாஓயா அபிவிருத்தித் திட்டம் காலதாமதமாகியது. 1990இல் உமா ஓயா மூலம் மின்சாரத்தை மாத்திரம் பெறும் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 2004ம் ஆண்டு பன்முகத் திட்டமாக செயல்படுத்த பாராளுமன்ற அனுமதி கிடைத்தது. ஈரான் அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தில் 2015ம் ஆண்டு பிரச்சினைகள் தோன்றின. பண்டாரவளை போன்ற பிரதேசங்களில் கிணறுகளில் ஊற்றுகள் வற்றியதால் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று ஊற்றுநீர் சுரங்கத்தினுள் செல்வதைத் தடுக்க கொங்ரீட் போடப்பட்டது. 

கேள்வி: உமா ஓயா திட்டத்தை பூர்த்தி செய்ய எவ்வளவு காலம் எடுக்கும்? 

பதில்: இவ்வருட ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும். 

கேள்வி: வடக்கில் மக்கள் பல வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் அநேகமானோர் இன்னும் கிணறுகள் மூலமே நீரைப் பெறுகிறார்கள். அவர்களுக்காக நீங்கள் பெற்றுக் கொடுக்கும் நீர்ப்பாசனத் திட்டங்கள் எவை? 

பதில்: வடக்கில் புதிதாக குளங்களை அமைக்க முடியாது. அதனால் நீரைத் தேக்கி வைக்க முடியாதுள்ளது. ஆனால் நீர்ப்பாசன திணைக்களம் நடத்திய ஆய்வு மூலம் வடமராட்சி மற்றும் உப்பாறு இரண்டு களப்புகளும் மழை காலங்களிலேயே நிரம்புகின்றன. அதனால் உவர்ப்புத்தன்மை நீங்குகிறது. அதனால் அதனை பயன்படுத்தி குடிநீரையும் விவசாயத்துக்கான நீரையும் பெற்றுக் கொள்ள முடியும். அந்நடவடிக்கையை நாம் தற்போது ஆரம்பித்துள்ளோம். 

கேள்வி: மன்னார் பிரதேச மக்கள் ஒரு போகமே பயிர் செய்கிறார்கள். மோசமான நீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது. அவர்களுக்காக பெற்றுக் கொடுக்க அபிவிருத்தி திட்டங்கள் உள்ளனவா? 

புதில்: அப்பிரதேச மக்களுக்காக கீழ் மல்வத்து ஓயா அபிவிருத்தித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் யோத குளம் நீரால் நிரப்பப்படும். அதனால் இரண்டு போகமும் பயிர் செய்யலாம். விசேடமாக நாம் இன்னுமொரு நீர்த் தேக்கத்தை யோத குளத்துக்கு அருகில் அமைக்கவுள்ளோம். 

கேள்வி: நாட்டில் ஏனைய பிரதேசங்களில் புதிதாக மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டங்கள் பற்றி கூற முடியுமா? 

பதில்: வடமத்திய பாரிய கால்வாய் அபிவருத்தித் திட்டத்தின் கீழ் 28கிலோ மீற்றர் நீளமான சுரங்கத்தின் மூலம் ஹொரவப்பொத்தானை வரை நீரைக் கொண்டு செல்லவுள்ளோம். அதே போல் வடமேல் மாகாண மக்களுக்காக அனைத்து நீர்ப்பாசனங்களையும் அபிவிருத்தி செய்யவுள்ளோம். விசேடமாக மாஓயாவில் அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட குளங்களையும் கண்டுபிடித்துள்ளோம். அவற்றையும் அபிவிருத்தி செய்யவுள்ளோம். மொத்தத்தில் நாடு முழுவதையும் இணைத்து நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். 

கேள்வி: நீர்ப்பாசனம் பற்றி பேசும் போது ஆறுகளை மறக்க முடியாது. களனி ஆறு தற்போது பெருமளவு அசுத்தமடைந்துள்ளது. இவ்வாறு பல ஆறுகள் அசுத்தமடைந்துள்ளன. ஆறுகளை சுத்தம் செய்யும் திட்டமொன்றை ஆரம்பித்தீர்கள் அல்லவா? வெற்றியடைந்துள்ளதா? 

பதில்: நிச்சயமாக அவை அனைத்தும் நடைபெற்று வருகின்றன.'ஆறுகளை பாதுகாப்போம்' திட்டத்தின் மூலம் இந்நாட்டிலுள்ள 103முக்கிய ஆறுகள் பாதுகாக்கப்படுகின்றன. முறையற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கதிர்காமத்தில் ஏற்கனவே அத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். 

கேள்வி: 'ஈ லேன்ட்'' என்னும் பெயரில் காணிகளை பதிவு செய்யும் திணைக்களம் மூலம் ஆரம்பிக்கப்பட்ட முறையினால் நீங்கள் எதிர்பார்த்த பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றீர்களா? 

பதில்: மக்களின் பிறப்பு, விவாகம், மரணம் ஆகியன தொடர்பான ஆவணங்கள் மற்றும் காணிகள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் மாவட்ட செயலாளர் காரியாலயங்களிலேயே காணப்படுகின்றன. விசேடமாக காணி தொடர்பாக பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. தன்னுடைய காணியை ஒருவர் மோசடியாக விற்றுள்ளார் என்பதை பல வருடங்கள் கழித்தே உரிமையாளர் அறிந்து கொள்கின்றார். அவ்வாறில்லா விட்டால் உரிமையாளர் இறந்த பின்னர் அது பற்றி ஆராயும் உறவினர்களே அறிந்து கொள்கின்றார்கள். 'ஈ லேன்ட்' மூலம் ஒருவருடைய காணி இன்னொருவருக்கு கைமாறும்போதே குறுஞ் செய்தி மூலம் தகவல் வழங்கப்படும்.குறிப்பிட்டளவு பணத்தைச் செலுத்தி விரைவில் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும். 

கேள்வி: மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் வரை முன்னைய மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கும்படி கூறுகிறார்கள். அது சாத்தியமா? 

புதில்: மாகாண சபைகள் 1987ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தாலேயே ஆரம்பிக்கப்பட்டன. மாகாணசபைகளுக்கு செலவிடும் பணத்தில் 85வீதம் அதனை நிர்வகிக்கவே செலவிடப்படுகிறது. அது இலங்கை போன்ற நாட்டுக்கு தாங்க முடியாத சுமையாகும். ஒரே விடயம்தான் மத்திய அரசாங்கத்தாலும் மாகாண சபையாலும் கையாளப்படுகின்றன.

தாரக்க விக்ரமசேகர  
தமிழில்: வீ.ஆர்.வயலட்


Add new comment

Or log in with...