கல்முனை கல்வி விடியலின் கலங்கரை விளக்காக திகழ்ந்த அமரர் நல்லரெத்தினம்

அமரர் நவரெத்தினம்நல்லரெத்தினம் கல்முனை, நற்பிட்டிமுனையில் தனிமனித கல்விச் சேவையாளராக நன்குஅறியப்பட்டவர். இவர் நற்பிட்டிமுனை கிராமத்தில் நவரெத்தினம், தங்கச்சிப்பிள்ளை தம்பதியருக்கு மகனாக 1945ஆம் ஆண்டுடிசம்பர் மாதம் 03ஆம் திகதிபிறந்தார். இக்கிராமத்தின்முதலாவது பட்டதாரி என்றபெருமையும் இவருக்குரியது.

தன்னைப் போல தன் கிராமத்தவர்களும் கல்வியில் உயர வேண்டும் என்ற நோக்கில் வறிய மாணவர்களை உயர் கல்விக்கு இட்டுச் செல்லும் ‘திருத்தணிகை வளாகம்’ எனும் கல்விச் சாலையை நிறுவி மாணவர்களுக்குக் கல்வி புகட்டினார். தனது இறுதிக் காலம் வரை கல்விப் பணிக்காக வாழ்நாளைச் செலவிட்டார். 

இவர் ஆரம்பக் கல்வியை நற்பிட்டிமுனை அ.த.க. பாடசாலையிலும் (தற்போதைய சிவசக்தி மகாவித்தியாலயம்) பின்னர் கல்முனை ஸ்ரீஇராமகிருஷ்ண மகாவித்தியாலயத்திலும் கற்றார். உயர் கல்வியை மட்டக்களப்பு அரசினர் கல்லூரியில் தொடர்ந்தார். பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைமாணி பட்டத்தைப் பெற்றார் . 

இவர் பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய காலத்தில் இலங்கையில் ‘சேகுவரா’ பெயரிலான இளைஞர் அமைப்பின் புரட்சிக் காலம். அரச பணிகளில் ஈடுபடாதிருந்த பல்கலைக்கழகப் பட்டதாரிகள் கைது செய்யப்பட்ட காலம். இதனால் ஆசிரியத் தொழிலிலேயே நாட்டமிருந்தும் உடனடியாக கிடைத்த கூட்டுறவுப் பரிசோதகர் பதவியிலேயே 1970களில் நுழைந்தார். ஓய்வு பெறும் போது கூட்டுறவுத் திணைக்களத்தில் கணக்காய்வு அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பதவி வகித்தார். 

 1969ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாக வெளிவந்த இவர், பிரத்தியேக கற்பித்தலில் தன்னை உட்படுத்திக் கொண்டார். அக்காலத்தில் கல்முனை பிரதேசத்தில் உயர்தரம் கற்பிக்க போதிய ஆசிரியர் வளம் இருக்கவில்லை. இதனால் தமிழ், பொருளியல், இந்து நாகரிகம், வர்த்தகம் ஆகிய நான்கு பாடங்களையும் தானே கற்பித்தார். 

நற்பிட்டிமுனையில் ‘திருத்தணிகை வளாகம்’ என்ற கல்வி நிலையத்தை நிறுவினார். வறிய மாணவர்களுக்கு பணம் பெறாமலே கற்பித்தார். தன் கிராமமான நற்பிட்டிமுனை மற்றும் அயல் கிராமங்களில் எட்டாம், ஒன்பதாம் வகுப்புடன் பாடசாலையிலிருந்து இடைவிலகி, பல்வேறு காரணங்களால் தொடர்ந்து கற்க முடியாது காணப்பட்ட இளைஞர்களின் நிலை கண்டு கவலை கொண்டார். இதனை நீக்குவதற்காக அத்தகைய மாணவர்களைத் திரட்டி தனது வீட்டிலேயே கற்பித்தார். இவ்வாறு பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய பலர் சாதாரண தரம், உயர் தரம் என தொடர்ந்து கற்று பல்கலைக்கழகம் சென்றனர். பலர் வெளிவாரியாக பட்டப்படிப்பையும் மேற்கொண்டனர். 

மாணவர்கள் சேர்ந்திருந்து கற்பதற்காக தனது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கிக் கொடுத்து, அவர்களின் கற்றல் செயற்பாடுகளை இரவுப் பொழுதுகளில் கண்காணித்து வழிநடத்தினார். நற்பிட்டிமுனையில் கல்வி அலைவீசிய ஒரு காலத்தை இவர் உருவாக்கினார். கல்முனை கல்விப் புலத்தில் படிப்படியாக ஆசிரியர் வளம் வளர்ந்த பின்னர் தமிழ்ப் பாடத்தில் மட்டும் தனது கற்பித்தலை மட்டுப்படுத்திக் கொண்டார். 

சிறந்த பேச்சாளாராகவும் விளங்கிய அமரர் நல்லரெத்தினம், பல்வேறு கலை இலக்கிய பங்கேற்புகளையும் இப்பிரதேசத்திற்கு நல்கியுள்ளார். இவரது கல்விசார் தொகுப்புகள் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவின. அவற்றில் ‘தமிழ் இலக்கணத் தெளிவு’, ‘ஈழத்து தமிழ் மணிகளின் தமிழ்ப் பணிகள்’, ‘ஈழத்துப் பெரியார்கள்’ முதலான கட்டுரைத் தொகுப்புகள் இவற்றில் முக்கியமானவை. 

கல்முனை கல்வி விடியலின் கலங்கரை விளக்கு 2006.12.05அன்று அணைந்தது. ஆனாலும் இப்பிரதேசத்தில் மக்கள் மனங்களில் அவர் இன்றும் வாழ்கின்றார்.

செ.பேரின்பராஜா
(துறைநீலாவணை நிருபர்)


Add new comment

Or log in with...