அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் தமிழர்களின் நிலத்தையும் அபகரிக்க முயற்சி | தினகரன்

அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் தமிழர்களின் நிலத்தையும் அபகரிக்க முயற்சி

முல்லைத்தீவு குறுந்தூர் மலையில் தமிழர்களின் பூர்வீக நிலத்தை அபகரிக்கும் நோக்கிலேயே அங்கு இராணுவக் கொடியும் புத்த பகவானின் சிலையும் நாட்டப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,  

முல்லைத்தீவு குறுந்தூர் மலையில் தமிழர்களின் பூர்வ மண்ணில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் இராணுவத்தினர் தலைமையில் இராணுவக் கொடிகள் நாட்டப்பட்டுள்ளதுடன் புத்த பெருமானின் சிலையொன்றும் வைத்துள்ளனர். அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் அங்குள்ள தமிழர்களின் முழு நிலத்தையும் அபகரிக்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கு உள்ளவை தமிழ் கிராமங்களாகும். தமிழர்கள் இங்கு பூர்வீகமாக வாழ்ந்துள்ளனர். இன்று அந்த இடங்கள் அழிந்துப்போயுள்ளன. அந்த இடங்களில் இருந்த மக்களும் இடம்பெயந்துள்ளனர். கல்யாணிப்புரம், படலைக்கல்லு என்ற இரண்டு ஆதிக்கிராமங்கள் அங்கு இருந்துள்ளதுடன், அவை தமிழர்களின் பூர்வீக நிலமாகும். இப்போதும் அங்கு சோக்காளை சுடலைக்கல் உள்ளது. சோமக்காளையில் இருக்கும் சிலுவைகளில் மலர்வு, உதிர்வு எழுதப்பட்ட தமிழ் மொழி வடிவங்கள் இன்றும் காணப்படுகின்றன.  

அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்யக்கூடாதென முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவும் உள்ளது. நீதிமன்ற கட்டளைமீறி ஓர் அமைச்சர் அங்கு சென்று ஆரவாரங்களுடனும் படைப்பட்டாளத்துடனும் இவ்வாறு நடந்துக்கொள்வதன் மூலம் நீதித்துறை இருக்கின்றதா எனக் கேட்கின்றோம்.


Add new comment

Or log in with...