பாராளுமன்ற PCR சோதனையில் 9 பேர் அடையாளம்

பாராளுமன்ற PCR சோதனையில் 9 பேர் அடையாளம்-During-943-PCR-Tests-in-Parliament-9-Tested-Positive-for-COVID19.jpg

- பாராளுமன்ற ஊழியர்கள் 5 பேர்
- பாதுகாப்பு கடமையிலுள்ள 4 பேர்

பாராளமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட 943 PCR பரிசோதனைகளின் அடிப்படையில் 9 பேருக்கு கொரொனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளரின் ஆலோசனைக்கமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனைக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன,

இரு கட்டங்களாக கடந்த ஜனவரி 13 மற்றும் 15ஆம் திகதிகளில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் 32 பேர், பாராளுமன்ற ஊழியர்கள், பாராளுமன்றத்தில் கடமையாற்றும் ஏனைய பணியாளர்கள், அதனுடன் இணைந்த பிரிவுகள் மற்றும் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 911 பேர் உள்ளிட்ட 943 பேருக்கு PCR  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த சோதனையில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் கொரோனாத் தொற்று ஏற்படவில்லை என்பதோடு, பாராளுமன்ற ஊழியர்கள் மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த ஐவர், பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியேயான பாதுகாப்பு வலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மூவர் உள்ளிட்ட 9 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, படைக்கல சேவிதல் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது CCTV காட்சிகளை சோதனையிடுவதன் மூலம் குறித்த தொற்றாளர்கள் சென்று வந்த இடங்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் தொடர்பில் மிக ஆழமாக ஆராயும் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவித்த அவர், அவ்வாறு அடையாளம் காணப்பட்டதன் பின்னர், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த சோதனைகளுக்கு முன்னர், பாராளுமன்ற ஊழியர்கள், ஏனைய ஊழியர்கள், பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுமாறாக ஒவ்வொரு வாரமும்  ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், இந்நடவடிக்கையில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 200 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் எவருக்கும் கொரோனாத் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் கொரோனா நிலையின் கீழ், பாராளுமன்றத்தின் எந்த ஒரு பிரிவும் இதுவரை மூடப்படவில்லை எனவும், பாராளுமன்ற கட்டடம் பல்வேறு தடவைகளிலும் கிருமி நீக்கம் செய்யப்பட்டதோடு, தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் பணி புரிந்த இடங்கள் மீண்டும் கிருமி நீக்கம் செய்யப்பட்டதோடு, தொடர்பாளர்களாக அடையாளங் காணப்பட்டவர்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
 

PDF File: 

Add new comment

Or log in with...