வாழைச்சேனை பிரதேச மீனவர்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸுக்கு நன்றி | தினகரன்

வாழைச்சேனை பிரதேச மீனவர்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸுக்கு நன்றி

வாழைச்சேன பிரதேச மீன்பிடித் தொழிலாளர்களின் வேண்டுகோளையேற்று நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மீனவர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஏ.சீ.எம்.முனவ்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த 14.03.2020ம் திகதி வாழைச்சேனை பிரதேச மீன்பிடித் தொழிலாளர்களின் குறைபாடுகளையும், தேவைகளையும் கேட்டறிவதற்காக, மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் அழைப்பினையேற்று நேரடி விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸிடம் நான்கு முக்கிய தேவைகள் மீனவர்கள் சார்பாக முன்வைக்கப்பட்டன.

வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக வளாகத்தில் கண்காணிப்பு சி.சி.ரி.வி கமராக்கள் பொருத்துதல், வாழைச்சேனை கரையோரப் பிரதேசம் முழுமையாக வீதிகளாகவும், படகுகள் தரித்து நிற்கும் நங்கூரமிடும் பிரதேசமாகவும் மாற்றியமைக்கப்படுதல், புல்லாவிமுனை கடற்பிரதேசத்தில் காணப்படும் கற்பாறைகளை அடையாளமிட்டு வெளிச்சவீட்டு சமிக்ஞைகளை அமைத்து படகுகள் சேதமடைவதிலிருந்து பாதுகாத்தல், எரிபொருள் மானியத்திக்கு மாற்றீடாக வழங்க வேண்டிய மீனவப் படகுகளுக்கான தொலைத் தொடர்பு சாதனங்களை வழங்குதல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இம்மானியம் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்ட மீனவப் படகுகளின் உரிமையாளர்களுக்கு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் வழங்கி வைக்கப்பட்டமையும் அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அதற்கமைய 10.01.2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக வளாகத்தில் 24 கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய தேவைகளையும் மீனவர்களின் நன்மைகருதி நிறைவேற்றித் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுன கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஏ.சீ.எம்.முனவ்வர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யு.எல்.எம். ஹரீஸ்...

(வாழைச்சேனை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...