புதிய அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பில் ஆளும், எதிர்த்தரப்புடன் நிபுணர் குழு ஆராயும் | தினகரன்

புதிய அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பில் ஆளும், எதிர்த்தரப்புடன் நிபுணர் குழு ஆராயும்

புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் நிபுணர் குழு விரைவில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு கட்சிகளை சந்தித்து புதிய அரசியலமைப்பு குறித்து ஆராய இருப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மம்பில தெரிவித்தார்.  

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,  

13ஆவது திருத்தம் தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை. இது கூட்டணி அரசாங்கமாகும்.15கட்சிகள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத் துகின்றன. கூட்டணி கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் இருக்கும். தமது கருத்துகளை முன்வைக்க சகலருக்கும் ஜனநாயக உரிமையுள்ளது.

13ஆவது திருத்தம், தேர்தல் முறை, நிறைவேற்று ஜனாதிபதி முறை உட்பட விடயங்கள் தொடர்பில் பேசப்படுகிறது.புதிய அரசியலமைப்பு தயாரிக்க அமைச்சரவையினால் நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்சிகளும் தமது யோசனைகளை முன்வைத்து வருகின்றன.

சகல யோசனைகளையும் ஆராய்ந்து இந்த குழு அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.அதனை ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும்.  

புதிய அரசியலமைப்பு தயாரிக்க ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதில் சிறந்த முன்னேற்றம் உள்ளது.

இந்தக் குழு விரைவில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பை சந்தித்து புதிய அரசியலமைப்பு குறித்து ஆராயும் என்றார்.  

மாகாண சபை தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,  மாகாண சபை தேர்தல் குறித்த ஆளும் தரப்பு கூட்டத்தில் ஆராயப்பட்டது. தற்போதைய சுகாதார நிலையில் தேர்தல் நடத்தாதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலைமை சீரானதும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றார்.  

தேசிய அரசாங்கம் தொடர்பில் எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,  28 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதிக்கு 30 அமைச்சர்களை நியமிக்க முடியும். மேலும் யார் நியமிக்கப்படுவர் என்று தெரியாது .தேசிய அரசாங்கம் அமைக்கும் தேவை எமக்கு கிடையாது என்றார். 

ஷம்ஸ் பாஹிம்  


Add new comment

Or log in with...