ரவூப் ஹக்கீமோடு தொடர்புபட்ட பத்து எம்.பிக்கள் தனிமைப்படுத்தலுக்கு

பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் அவருக்கு நெருக்கமாக செயற்பட்டவர்களான மேலும் 10 எம்பிக்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பாராளுமன்றத்தின் பிரதம பாதுகாப்பு நிறைவேற்று அதிகாரி நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதேவேளை சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டு பாராளுமன்ற ஊழியர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரவூப் ஹக்கீம் எம்பி கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமூகமளித்திருந்த நிலையில் அவருக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள் மற்றும் அவரோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள் என சிசிடிவி கெமரா மூலம் கண்காணிக்கப்பட்டுள்ள பத்து எம்பிக்களை தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தமக்கு கொரோனாவைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தாம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் நேற்றைய தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 10 நாட்களில் தம்மோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் தம்மை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் தற்போது இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். முதலாவதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் தற்போது ரவூப் ஹக்கீம் எம்பி வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஹிக்கடுவ பகுதியில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை சிறப்பாக உள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...