யாழ்ப்பாணத்தில் இஞ்சி உற்பத்தி | தினகரன்

யாழ்ப்பாணத்தில் இஞ்சி உற்பத்தி

நம்பிக்கை தருகிறார் இணுவில் விவசாயி குலசிங்கம்

நாம் வாழும் உலகில் மனிதன் முயற்சியினால் மட்டுமே உயர்கின்றான் என்பது நிதர்சனமே. மானுட உயிர்களை மட்டுமல்ல,தன்னை நம்பி வாழும் பல உயிர்களையும் வாழவைக்கும் கடவுளாக விவசாயி விளங்குகின்றான்.

விவசாயி உணவை மட்டுமல்ல, உணவை மருந்தாகவே உருவாக்குகின்றான். பணப் பயிர்களுக்கு மத்தியில் அத்தியாவசியம் கருதி பல உப உணவுப் பயிர்களையும் பயிரிடுகின்றான். இப் பயிர்களில் ஒன்றுதான் இஞ்சி.

வரலாற்றில் 11ஆம் நூற்றாண்டில் இஞ்சி வர்த்தகத்தில் முதலிடம் வகித்த அரேபியர்கள் வர்த்தகப் பரிமாற்றத்தில் இஞ்சியைப் பயன்படுத்தினார்கள். பழங்காலத்தில் உலகளவில் பழக்கத்தில் இருந்த பாரம்பரிய மருத்துவ முறையில் 50 சதவீதமான மருந்துகள் இஞ்சியையே மூலப்பொருளாகக் கொண்டிருந்ததாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையைப் பொறுத்தளவில் ஏற்றுமதிப் பயிராகவும் சந்தையில் உயரிய பெறுமதி மிக்க பயிராகவும் இஞ்சி காணப்படுகின்றது.

இலங்கையின் வடபுலத்திலே யாழ்ப்பாணம் விவசாயத்திற்குப் பெயர்போன தனித்துவமான பிரதேசமாகும். வெங்காயம், புகையிலை என்பவற்றுடன் தற்போது இஞ்சி உற்பத்தியிலும் யாழ்ப்பாணம் தனக்கென ஒரு இடத்தினைத் தக்கவைக்க ஆரம்பித்துள்ளது.

இஞ்சிப் பயிர்ச் செய்கையினை அதிகமானோர் முயற்சி செய்தாலும் ஒரு சிலரே இதில் வெற்றி அடைந்துள்ளனர். மற்றைய பயிர்களைப் போல இப் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ள முடியாதுள்ளது. ஆனால் அதையும் கடந்து, எத்தனையோ சவால்களுடன் இணுவிலைச் சேர்ந்த விவசாயி ஒருவர் இஞ்சிப் பயிர்ச் செய்கையில் வெற்றிகண்டுள்ளதுடன் விடாமுயற்சியுடன் தொடர்ந்தும் இஞ்சிப் பயிர்ச் செய்கையை விரிவுபடுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டும் வருகின்றார்.

விவசாய ஊரான இணுவில் பிரதேசத்தில் வசித்து வருபவர்தான் ஆறுமுகம் குலசிங்கம். இவர் விவசாயத்துறையில் மிகுந்த ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் சிறுவயதில் இருந்தே ஈடுபட ஆரம்பித்துள்ளார். தனது தந்தை விவசாயம் செய்யும்போதே அவருடன் சென்று அவர் மேற்க்கொள்ளும் செயன்முறைகளைப் பார்த்துத் தானும் அவருடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்ததாக அவர் கூறுகிறார்.

இருப்பினும் தனது பிரதான பணியாகத் தொழில்நுட்ப உத்தியோகத்தராக வேலை செய்தமையினால் அவரால் விவசாயத்தில் முழுக்கவனம் செலுத்த முடியவில்லை. ஆனாலும் ஓய்வு பெற்றதும் விவசாயத்தினையே முழு மூச்சாகக் மேற்கொண்டு கமத்தொழில் செய்ய ஆரம்பித்தார்.

இவர் முதலில் எல்லாப் பயிர்களையும் பயிரிடுவதில் நாட்டங்கொண்டு அதில் வெற்றியும் கண்டார். இம்மண்ணில் இதெல்லாம் சாத்தியமா என வேறெவரும் பயிரிடத் தயங்கிய பயிர்களைக் கூட ஆறுமுகம் குலசிங்கம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கிப் பயிரிட்டுச் சாதித்துக் காட்டியுள்ளார் என்பதே உண்மை.

ஆந்த ஆர்வமும் முயற்சியுமே இவரை இஞ்சியையும் யாழ். மண்ணில் பயிரிடத் தூண்டியது எனலாம். இஞ்சிப் பயிர்ச் செய்கையினை யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று வருடங்களாக குலசிங்கம் வெற்றிகரமாக பயிரிட்டு வந்துள்ளார்.

இதற்காக அவர் பல்வேறு சவால்களை எதிர் நோக்கினாலும் வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்தவனே வெற்றியாளன் என்பதைப் போல இஞ்சிப் பயிரிச் செய்கையில் சில பின்னடைவுகளை அடைந்தாலும் நட்டங்கள் ஏற்பட்டாலும் துவண்டுவிடாது தொடர்ந்து முயற்சியை மேற்கொண்டமையே வெற்றிக்குக் காரணம் என்று அவர் கூறுகிறார்.

அரசாங்கம் வழங்கிய இஞ்சி விதைக்கிழங்குகளின் மூலமே இப் பயிர்ச் செய்கையினைச் செய்யத் தொடங்கிய குலசிங்கம் ‘ஒரு தடவை 500 கிலோவிலிருந்து 650 கிலோ வரை விளைச்சலை எதிர்பார்க்கலாம்’ எனக் குறிப்பிடுகின்றார்.

இஞ்சிப் பயிர்ச் செய்கைக்கான நுட்பங்களைப் பட்டியலிடும் அவர் பின்வருமாறு தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

இஞ்சி பயிரிடுவதற்கு முதலில் நிலத்தின் வளம் பேணுதல் அதாவது நிலத்தினைப் பண்படுத்துதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். கால்நடைக் கழிவுகளை நிலத்தைக் கடைசித் தடவை உழுத பின்னர் இட வேண்டும். அதுமட்டுமல்லாது இஞ்சி பயிரிடத் தொடங்குவதற்கு 60 முதல் 70 நாட்களுக்கு முன்னர் பாத்திகள் அமைத்து அவற்றுக்குத் தொழு உரம் இட்டு, மணல் பரவி 3 அங்குலம் அளவில் இஞ்சிக் கிழங்குகளைத் துண்டு துண்டுகளாக வெட்டி அவற்றினை குறிப்பிட்ட ஆழத்தில் நட்டு மண்ணால் மூடி தண்ணீர் ஊற்றிப் பராமரித்துக் கொள்ளவேண்டும்.

இஞ்சி நாற்றினை இவ்வாறு வளர்த்த பின்னர் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒன்று என்ற அடிப்படையில் நடுகை செய்ய வேண்டும். இஞ்சியானது அதிகபட்சமாக 2 முதல் 3 அடி வரை வளரும் ஓர் பயிராகும். இச் செடியினை அதிகம் சூரியஒளி படாத இடமாகவும் அதிக காற்று அடிக்காத இடமாகவும் பயிரிடல் வேண்டும்.

கடுங் காற்றில் இருந்து பாதுகாப்பதுடன் இவற்றுக்கு ஏற்ற வெப்பநிலை 25 செல்சியஸ் தொடக்கம் 30 செல்சியஸ் வரை இருக்க வேண்டும். இவ்வாறு நடப்பட்ட பயிர் வளர்ந்துவரும்போது அதிகமான நீர் தேவைப்படும். இப்பயிருக்கு தூவல் நீர்ப்பாசன முறைப்படி தண்ணீர் பாய்ச்சுதல் நீர் முகாமைத்துவ அடிப்படையிலும் மிகப் பொருத்தமானதாகும்.ஒருவேளை காற்றின் மூலமாகவோ அதிக வெப்பம் மூலமாகவோ நிலம் காய்ந்திருந்தால் பயிர்கள் பழுதாகிவிடும். ஆகையால் ஈரப்பதமான சூழல் ஒன்று மிகவும் முக்கியமானதாகும். இப் பயிர்களை அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதற்கும் வெப்ப வீச்சினைக் கட்டுப்படுத்துவதற்கும் நான்கு பக்கமும் தடிகளை நட்டு மேற்பக்கமாக வலை ஒன்றினை கட்டும் பந்தல் முறை இலகுவானதாகும். இஞ்சியினை வளமான நிலத்தில் நல்ல முறையில் பாதுகாத்து வைத்திருந்தால் அதற்குக் கூடுதலான எந்த ஊட்டச்சத்தும் தேவையில்லை. இருப்பினும் ஊட்டச்சத்து குறைவான மண்ணாகின் பசளை இடுதல் அவசியமாகும். ஆறு மாத காலத்திற்குப் பிறகு கலவை உரமும் இடவேண்டும்.

களை பிடுங்குதல் இஞ்சிப் பயிர்ச் செய்கையில் அவசியமாகும். களை அதிகமாக வளர்ந்தால் இஞ்சி விளைச்சல் பாதிப்படையும். ஆகவே களை களைதல் முக்கிய செயற்பாடாகும். இப்பயிரானது எட்டு தொடக்கம் ஒன்பது மாதங்கள் முடிவடையும்போது அறுவடைக்குத் தயாராகிவிடும். ஏழாம், எட்டாம் மாதங்கள் வரும்போது மேலே போடப்பட்ட வலையைக் கழற்றி விடவேண்டும். பின்னர் தண்ணீர் பாய்ச்சும் அளவினையும் சிறிது சிறிதாகக் குறைக்க வேண்டும். இஞ்சிச் செடியின் இலைகள் ஓர் பழுத்த மஞ்சள் நிறத்திற்கு வந்ததும் இப் பயிரானது அறுவடைக்கு தயாராகிவிட்டது என்று அர்த்தமாகும். இவ்வாறு இலைகள் அனைத்தும் பழுத்து விழத் தொடங்கியதும் பக்குவமாக மண்ணை அகழ்ந்து இஞ்சிக் கிழங்குகள் பழுதடையாத வண்ணம் அவற்றினை எடுத்துக்கொள்ளலாம் என்கிறார் குலசிங்கம். இஞ்சிப் பயிர்ச் செய்கை யாழ்ப்பாணத்திலும் சாத்தியம் என்பதற்கு குலசிங்கத்தினது முயற்சி ஒரு உதாரணமாகும். கொரோனா காலப்பகுதியில் இஞ்சிக்கான கேள்வி நாட்டில் அதிகரித்தமை அனைவரும் அறிந்ததே. இஞ்சி இறக்குமதி குறைந்த இக் காலப் பகுதியில் உள்ளுர் உற்பத்தியின் தேவையும் உணரப்பட்டிருக்கிறது. இவ்வாறான சூழலில் குலசிங்கம் போன்றோரின் முயற்சிகளை யாழ்ப்பாணத்தின் ஏனைய விவசாயிகளும் ஏன் பின்பற்ற முடியாது?.


Add new comment

Or log in with...