முகக்கவசத்தை தவறாக அணிந்து கொள்வதால் பயனெதுவும் இல்லை

கொரோனாவை மற்றையோருக்கும் பரப்புவது தண்டனைக்குரிய குற்றம்

கவசம் என்ற சொல்லுக்குரிய சரியான தமிழ்ப் பதம் ‘பாதுகாப்பு’ என அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் ‘மாஸ்க்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஆங்கில - தமிழ் அகராதியில் ‘முகமூடி’ அல்லது ‘முகமூடி அணி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

முகக் கவசம் என்பது முகத்துக்கும் முகத்தில் அமைந்துள்ள சுவாச உறுப்புக்களின் பாதுகாப்புக்காகவும் சுவாச உறுப்புக்களின் ஊடாக கிருமிகள் உள்ளே நுழைவதை தடுப்பதற்காகவும் அணியும் பாதுகாப்பு கவசம் ஆகும்.

நோய்க் கிருமிகள் மனிதனின் சுவாச உறுப்புக்களின் ஊடாக உள்ளே நுழைவதை இந்த முகக் கவசம் தடுக்கின்றது. மூக்கு துவாரங்களின் ஊடாக உள்ளே நுழையும் கிருமிகள் சுவாசத் தொகுதிகளில் அதன் ஆதிக்கத்தை செலுத்த தொடங்குகின்றன. பின்னர் அதன் தொற்று அதிகமாகி கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் நிலைக்கு மாறி விடுகின்றது.

இதிலிருந்து பாதுகாக்கவே அல்லது தடுக்கவே முகக்கவசம் அணியப்படுகின்றது. குறிப்பிட்ட சுவாச உறுப்புக்களை சுகாதார முறைப்படி மூடப்பட்டிருக்கும் போது மாத்திரமே நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்.எனவேதான் கொரோனா அச்சம் நீங்கும் வரை முகக்கவசமே இன்றைய நிலையில் மக்களுக்கு துணை புரியும் சாதனங்களில் ஒன்றாக கொள்ளப்படுகின்றது.

இலங்கையில் மாத்திரமல்ல முழு உலகிலும் இவ்வைரசின் தாக்கம் அதிகரித்துச் செல்லும் நிலையில், வைரஸ் தாக்கும் அபாயம் இப்போதும் அதிகம் உள்ளதாக அன்றாடம் ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொள்கின்றோம். எனவே முகக்கவசம் சில வேளைகளில் பொருத்தமில்லாமல் அணியப்படும் போது கிருமிகள் எம்மை அறியாமலே உள் நுழைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதனால்தான் முகக்கவசத்தை சரியான விதத்தில் அணிய வேண்டும் என நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சில முகக்கவசங்கள் மூக்கின் கீழ் விழுந்து விடக் கூடியதாக அணியப்படுகின்றன.சிலர் அணியும் முகக் கவசம் வாய்ப் பகுதிக்கு மேல் இருக்கின்றதையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது. இப்படிப்பட்ட முகக்கவசங்களால் பொது இடங்களில் இருமும் போதும் அல்லது தும்மும் போதும் கிருமிகள் வெளியில் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவேதான் ஒவ்வொரு முறையும் முகக்கவசம் அணியும் போதும் அதனை சரியான முறையில் அணிந்து கொள்ளுதல் கட்டாயமானதாகும். மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை முற்றிலும் மூடும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இன்று அனைவரும் முகக்கவசம் அணிகிறார்கள் என்றால் எல்லோரும் சரியாக அணிகிறார்களா? என்பதில்தான் பிரச்சினையே உள்ளது.சிலர் அதிகாரிகளுக்கு பயந்து அணியும் முகக்கவசத்தை அதிகாரிகள் சென்றதும் வாய்ப்பகுதிக்கு கீழால் தாடை பகுதிக்கு நகர்த்திக் கொள்கிறார்கள்.சிலர் முகக்கவசம் அணியாமலே இருக்கிறார்கள்.

பொது இடங்களில் ஒன்றுகூடுபவர்கள் ஒரு மீற்றர் இடைவெளியை பேணினாலும் முகக்கவசம் அணிவதில் அலட்சியம் காட்டுவதை பார்க்கிறோம்.சிலர் நீண்ட நாட்கள் ஒரே முகக் கவசத்தை அணிந்து இருக்கிறார்கள்.

இப்படி பல குறைபாடுகளுடன் அணியப்படும் முகக்கவசத்தால் பொது மக்கள் அடைந்து கொள்ளும் நன்மைகள் என்ன என்ற கேள்விக்கு பதில் பொதுமக்களுக்கு தெரியாமலேயே உள்ளது.எனவேதான் முகக்கவசம் அணிந்து கொள்வதில் சரியான கவனம் செலுத்துவது அவசியமாகும்.

மிகச் சரியான முறையில் முகக்கவசம் அணிதல் எவ்வாறு? அதை எவ்வாறு தொற்று நீக்குதல்? எப்படியான முகக் கவசத்தை அணிதல்? அதன் கால அளவு ? இவை போன்ற பல்வேறு சுகாதார வழிமுறைகள் மக்களுக்கு தெரியாமலேயே உள்ளன. இதை பொதுமக்கள் மத்தியில் சரியான தகவல்களுடன் சென்றடையச் செய்வதற்கான முறைகளை பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி சுகாதாரப் பிரிவினர் அல்லது சுகாதார தொண்டர்கள் ஊடாக மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளியை மேலும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் .பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் .இதனூடாக மக்கள் பாதுகாப்பாக இருக்க சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முகக்கவசம் அணிவதில் கவனயீனமாக செயல்படும் நபர்களால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளதென்பதை மறந்து விடலாகாது. அதேவேளை மற்றையோருக்கு கொரோனாவைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதையும் மறந்து விடலாகாது.

-ஏ.ஆர்.எம்.ரபியூதீன்
(திறப்பனை தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...