மஹர சிறை கலகம்; 3 கைதிகளை அடக்கம் செய்ய அனுமதி

மஹர சிறை கலகம்; 3 கைதிகளை அடக்கம் செய்ய அனுமதி-Mahara Prison Shooting-Court Allows for the Burial Bodies of 3 Inmates

- 11 பேரும் துப்பாக்கிச் சூட்டிலேயே மரணம்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலகத்தின் போது உயிரிழந்த கைதிகளில் எஞ்சிய 3 கைதிகளின் உடல்களை அடக்கம் செய்ய, வத்தளை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, மரணமடைந்த கைதிகள் 11 பேரும் துப்பாக்கிச் சூட்டிலேயே மரணமடைந்துள்ளதாக, பிரேதப் பரிசோதனை அறிக்கைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மஹர சிறையில் கடந்த நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற கலகத்தின்போது, 11 கைதிகள் மரணமடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கொரோனா காரணமாக  அவர்களது உடல்களை தகனம் செய்ய முடிவு செய்திருந்த நிலையில், உடல்களை எரித்து அழிப்பதன் மூலம் மஹர சம்பவம் தொடர்பான விசாரணைகளில் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு விடும் எனத் தெரிவித்து, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

அதற்கமைய, குறித்த சடலங்களின் பிரேதப் பரிசோதனையை விரைவாக நிறைவு செய்ய, ஐவரடங்கிய விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது,

இதன்போது, குறித்த கைதிகளில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் தலா 4 பேர் எனும் அடிப்படையில், இரு கட்டங்களாக 8 கைதிகளினதும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் கையளிக்கப்பட்டு, அவை தகனம் செய்யப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து எஞ்சிய 3 கைதிகளினதும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் கையளிக்கப்பட்டு, அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களது உடல்களை அடக்கம் செய்ய வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று (08) அனுமதி வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...