புதுக்கவிதைக்கான வித்தை விதைத்த எட்டயபுர மகாகவி | தினகரன்

புதுக்கவிதைக்கான வித்தை விதைத்த எட்டயபுர மகாகவி

- கல்முனை பாரதி பிறந்தநாள் நிகழ்வில் கவிஞர் கே.கிலசன்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 138ஆவது பிறந்த நாள் நிகழ்வு பாண்டிருப்பு அகரம் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனையில் ஓய்வுநிலை அதிபர் இராஜரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் தமிழ்மணி கண.வரதராஜன், இந்துசமய ஆசிரிய ஆலோசகர் எம். லக்குணம், கவிஞர் கே.கிலசன், எழுத்தாளர் நீலாவணை இந்திரா அகரம், செ.துஜியந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு பாரதியாரின் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன் பாரதியாரின் நினைவு கருத்துரைகளையும் கலைஞர்கள் பகிர்ந்து கொண்டனர். தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வதற்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தமிழுக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஆற்றிய பணிகள் தொடர்பாக அனைவராலும் கருத்துரைகள் கூறப்பட்டன.

இங்கு மகாகவிபாரதியாரைப் பறறி சிறப்புரை நிகழ்த்திய கவிஞர் கே.கிலசன் 1882 இல் பிறந்த சுப்பிரமணிய பாரதியாரின் பல படைப்புகள் பற்றி யாவரும் அறிந்திருப்பீர்கள்.

அவர் வாழ்ந்த காலத்தில் கொண்டாடப்பட்டாரா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. அவர் சொன்ன கருத்துக்களை கேட்கf;கூட பெரிதாய் யாரும் இருந்துவிடவில்லை. உயர் சாதி, கீழ் சாதியென சாதி வெறி பிடித்தகாலம் பெண்களை அடிமையென நினைத்த நேரம் துணிந்தெழுந்து பேனை முனையால் கேள்விகள் தொடுத்து பூனூல் கழற்றி மனைவி செல்லம்மாவின் தோளில் கைபோட்டு வீதியில் நடக்கும் தைரியம் எளிதில் யாருக்கும் வந்துவிடுமா?

தமிழ் பாலுண்ட கலைமகளின் அருள்பெற்ற பாரதியால் மட்டுமே அது முடிந்தது. தான் வறுமையில் வாடியபோதும் 'சொல்லடி சிவசக்தி எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கு' என உலக மக்களுக்கு பயன்தரக் கேட்டாரே தவிர சுய நலமாய் எதையும் கேட்காத தேசியக்கவி.

சுதந்திர விடுதலைக்காய் எழுத்துக்களை ஆயுதமாக்கி பத்திரிகைகள் வாயிலாக மக்களை கிளர்ந்தெழச் செய்தவர். அதற்காக சிறை வாசமும் கண்டவர். யார் எதைச் சொன்னாலும் தலையசைத்த காலத்தில் தவறென்றால் தலை நிமிர்ந்து கேள்விகள் கேட்டவர். மகாத்மா காந்தியையும் விட்டு வைக்கவில்லை. கூட்டமொன்றில் ஆங்கில மொழியில் பேசியதற்காக காந்தியிடமே ஏன் தமிழில் பேசவில்லை என கேள்வி தொடுத்தார்.

32 மொழிகள் வரை கற்றும் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது ஒன்றும் காணோமென தமிழுக்கு உரம் கொடுத்த கவி இமயமலைகூட தமிழனுக்கேயென அன்றே பாடினார்.

நோபல் பரிசு பெற்ற வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களையே தன்னோடு போட்டி போட அழைத்தது தமிழ் மீதும் அவர் மீதுமான தன்னம்பிக்கையை மேலும் எடுத்தியம்புகிறது.

இலக்கணத் தமிழோடு மரபுவழி கவிதைகள் மட்டுமே நிலைத்து நின்ற காலத்தில் சிறுவர் முதல் முதியோர் வரை படிக்காத பாமரரும் விளங்கிக் கொள்ளும் வகையில் புதுக்கவிதைக்கான விதைதனை விதைத்த எட்டயபுரத்தில் உதித்த விடிவெள்ளி பாரதியாரின் வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ எனும் வரிகள் போலவே தமிழுள்ளவரை பாரதியின் பெயரும் புகழும் நிலைத்திருக்கும் எனத் தெரிவித்தார்.

பி.எம்.எம்.ஏ.காதர்
படங்கள்: மருதமுனை தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...