முஸ்லிம்களின் இலக்கிய சொத்து: மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் | தினகரன்

முஸ்லிம்களின் இலக்கிய சொத்து: மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத்

நாடறிந்த எழுத்தாளரும், ஆய்வா ளரும் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியுமான கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மணிப் புலவர் மருதூர் ஏ . மஜீத் தனது 80வது வயதில் கடந்த 26ம் திகதி சாய்ந்தமருதில் காலமானார்.

1940ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பிறந்த மணிப் புலவர் மருதூர் ஏ. மஜீத், இலங்கையின் கலை இலக்கியத் துறைக்கும் கல்வித் துறைக்கும் அளப்பரிய சேவையை வழங்கியவர்களில் ஒருவராவார்.

தென்கிழக்கு முஸ்லிம்களின் கலை, இலக்கிய பொக்கிஷமாக விளங்கிய மருதூர் ஏ. மஜீத் அவர்களின் மறைவு இலங்கையின் கலை, கலாசார இலக்கியத்துக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் .

கல்விப் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர் இவர். வடக்கு-, கிழக்கு மாகாணசபையின் உதவி கலாசார பணிப்பாளராகவும் சில காலம் கடமையாற்றினார். முஸ்லிம் சமூகத்தின் கல்வித்துறைக்கு பல அரசியல் தலைவர்களோடும், சமூகப் பணியாளர்களோடும் இணைந்து பணியாற்றிய ஒருவர்.

இவர் 'தாஜல் அதீப்' (இலக்கிய வேந்தர்), கலாபூஷணம் ஆகிய அரச விருதுகளையும் கலை இலக்கிய விருதுகள் பலவற்றையும் பெற்றுக் கொண்டவர். இலக்கியத்துறையில் புலவர், மணிப் புலவர் ஆகிய பட்டங்களையும் தனதாக்கிக் கொண்டவர். அண்மையில் ஆளுநர் விருதையும் பெற்றுக் கொண்ட பிரபல இலக்கியவாதியும் எழுத்தாளருமாவார்.

மறக்க முடியாத நினைவுகள், மத்திய கிழக்கில் இருந்து மட்டக்களப்பு வரை, இளமையின் இரகசியம் நீடித்த ஆயுளும், நீரழிவு வியாதியும் அது பற்றிய சில அனுபவ குறிப்புகளும், பன்னீர் வாசம் பரவுகிறது, தென்கிழக்கு தேசத்தின் நாட்டார் இலக்கியம், போன்ற 19 நூல்களை கலை இலக்கிய உலகத்திற்கு வழங்கி விட்டு விடை பெற்றுச் சென்றுள்ளார்.

இவரது பணிகளும் இலக்கியத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பும் நினைவுகூரத்தக்கவை ஆகும். அவர் எழுதிய முஸ்லிம் புலவர்கள் பற்றிய நூல் இன்னும் அச்சுருவாக்கம் பெறவில்லை.

சாய்ந்தமருது பிரதேச கலை இலக்கிய விழாவை முன்னிட்டு வெளியிடப்படுகின்ற நூலுக்கு 'கலை இலக்கிய பூங்கா' எனும் பெயரை இவரே இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் வைத்தார். அப்புத்தகத்திற்கு 'தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தின் பொல்லடி' எனும் நிகழ்தல் கலை ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார். புத்தகம் வெளியிடப்படுவதற்கு முன்னரே அவர் பிரிந்து விட்டார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான மணி புலவர் மருதூர் ஏ.மஜீட் அவர்களின் ஜனாஸா சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசல் மைதானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

ஏ.எல்.எம்.ஷினாஸ்
(பெரியநீலாவணை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...