காலி சடலம்: சுற்றுநிருபத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கவும் | தினகரன்

காலி சடலம்: சுற்றுநிருபத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கவும்

காலி சடலம் சுற்றுநிருபத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கவும்-Galle COVID19 Janaza-Dr Asela Gunawardana Ordered to Cremate the Body

- சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எழுத்து மூலம் அறிவிப்பு

கொவிட்-19 மரணம் தொடர்பில் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, காலி, கராபிட்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபரின் சடலத்தை தகனம் செய்யுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

நேற்றையதினம் (23) காலி தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு இதனை எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை (19) காலி, தேத்துகொட பகுதியில், கொரோனா காரணமாக உயிரிழந்த 84 வயதான முஸ்லிம் நபர் ஒருவரின் ஜனாஸாவை தகனம் செய்யாது, அதி குளிரூட்டியில் வைக்குமாறு காலி மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனீ பத்திரண கடந்த திங்கட்கிழமை (21) உத்தரவு பிறப்பித்திருந்தார்.

கொரோனா மரணம் என சட்ட வைத்திய அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட முஸ்லிம் நபர் ஒருவரின் ஜனாஸா தொடர்பில், தகனம் செய்யுமாறு, காலி மேலதிக திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்ட பின்னர், அவரது உறவினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவோ பொறுப்பேற்கவோ முடியாது என தெரிவித்திருந்த நிலையில், விடயம் நீதிமன்றிற்கு சென்றது. இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போதே காலி மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனீ பத்திரண குறித்த உத்தரவை வழங்கியிருந்தார்.

இதன்போது, குறித்த விடயம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையை பெற்று செயற்படுமாறு, காலி தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையிலேயே, அசேல குணவர்தன தனது நிலைப்பாட்டை, காலி தலைமையக பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு நேற்றையதினம் (23) எழுத்துமூலம் அறிவித்துள்ளார்

காலி சடலம் சுற்றுநிருபத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கவும்-Galle COVID19 Janaza-Dr Asela Gunawardana Ordered to Cremate the Body

அதில், கொவிட்-19 மரணம் தொடர்பில் தன்னால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்திற்கு அமைவாக, நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளதோடு, குறித்த ஆலோசனை தொடர்பில் காலி நீதவானுக்கு அறிவித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உரிமை கோரப்படாத உடல்களை சேமித்து வைப்பதற்கு, குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை வழங்குமாறு நீதியமைச்சருக்கு அசேல குணவர்தன எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

காலி சடலம் சுற்றுநிருபத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கவும்-Galle COVID19 Janaza-Dr Asela Gunawardana Ordered to Cremate the Body

ஆயினும் குறித்த கடிதம், ஒரு சுற்றுநிருபமாக பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அக்கடிதம் தனக்கும் அமைச்சருக்கும் இடையிலான ஒரு தொடர்பாடல் எனவும், உரிமை கோரப்படாத உடல்களை சேமிப்பதற்கு போதிய வசதிகள் இல்லாத வைத்தியசாலைகளில்
உடல்களை சேமித்து வைக்க குளிரூட்டி கொள்கலன்களை கோரியே குறித்த கடிதம் எழுதப்பட்டதாகவும் அவர் மேலும் அதில் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் குறித்த கடிதம், ஒரு சுற்றறிக்கை அல்ல என்பதோடு, PCR/ Rapid Antigen சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை அகற்றுவது எரிப்பதன் மூலமே என்பது தொடர்பில் தன்னால் இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகள் மற்றும் 2020 ஏப்ரல் 11 திகதியிடப்பட்ட 2170/8 எனும் அரசாங்க வரத்தமானிகளையும் மீண்டும் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், காலி நபரின் இறுதிக் கிரியை தொடர்பில் பிரதேசவாசிகள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், குறித்த உடலை தகனம் செய்யாவிட்டால், அனைத்து சேவைகளும் இன்று (24) முதல் இடைநிறுத்தப்போவதாக, கராபிட்டி மருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரிகள் நேற்று (23) தெரிவித்திருந்தனர்.

கொரோனா நோய்த்தொற்றுகளால் மரணித்தவர்களின் உடல்களை தகனிக்க வேண்டும் என, தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில், கொவிட் நோய்த்தொற்று காரணமாக இறக்கும் ஒருவரின் உடலை 800 முதல் 1200 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் 45 நிமிடங்கள் வரை முழுமையாக எரித்து தகனம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...