இன்றுடன் 3ஆம் தவணை நிறைவு; ஜனவரி 11 இல் முதலாம் தவணை

இன்றுடன் 3ஆம் தவணை நிறைவு; ஜனவரி 11 இல் முதலாம் தவணை-2020-3rd Term School Closed from Dec 23-2021-1st Term Will be Begins on Jan 11

- அனைத்து மாணவர்களும் வகுப்பேற்றப்படுவர்
- 1ஆம் தவணையில் பாடத்திட்டங்களை நிறைவு செய்ய அறிவுறுத்தல்

2020 பாடசாலை மூன்றாம் தவணை  இன்றுடன் (23) நிறைவடைந்துள்ளது. எதிர்வரும் 2021 ஜனவரி 11ஆம் திகதி, தரம் 01 முதல் அனைத்து தரங்களிலுமுள்ள மாணவர்களுக்கான புதிய தவணை ஆரம்பிக்கப்படும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் அனைத்து மாணவர்களும் அடுத்த ஆண்டில் அவர்களது அடுத்த தரத்திற்கு வகுப்பேற்றப்பட வேண்டும் என பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2021 ஆம் ஆண்டில் பாடசாலை ஆரம்பிக்கப்படும்போது, வகுப்பேற்றப்பட்ட தரங்களில் மாணவர்கள் கல்வி கற்க முடியும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் வருடத்திற்கான பாடப் புத்தகங்களை, இவ்வாண்டின் இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, அனைத்து மாகாண பிரதான செயலாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரிவெனா அதிபர்கள், பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் பாடசாலைகளில் 2020ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்படாவிட்டால், 2021 முதலாம் தவணையின் முதல் இரு மாதங்களுக்குள், பாடசாலை மட்டத்தில் திட்டமொன்றினை செயற்படுத்தி, அவற்றை முழுமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாகாண அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளடக்கிய சுற்றறிக்கை மற்றும் பாடசாலை செயற்பாடுகளை உள்ளடக்கிய நாட்காட்டியொன்றும், கல்வி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளும், தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளும் மறு அறிவித்தல் மீண்டும் திறக்கப்படாது என, கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...