பாலமுனை கொவிட் நோயாளர்களால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது; வழக்கு

பாலமுனை கொவிட் நோயாளர்களால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது; வழக்கு-Public Nuisance Case Against Covid Treatment Facility in Palamunai Over Groundwater Contamination

- ஜனாஸா எரிப்புக்கு எதிரான மனு தள்ளுபடி விவகாரத்தின் அடிப்படையில் வழக்கு
- குரல்கள் இயக்கம் சட்ட உதவி
- பிரதிவாதிகளுக்கு ஜனவரி 04 அழைப்பாணை

பாலமுனையில் அமைந்துள்ள கொவிட்-19 தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் கொவிட் நோயாளிகளது கழிவுகளால் நிலம் மற்றும் நிலக்கீழ் நீர் மாசடைவதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கினை கடந்த டிசம்பர் 17ஆம் திகதி, குறித்த சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைந்து தமது பிரதேசத்தில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனைத் தடுக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நேற்றையதினம் (21) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் இவ்வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் முறையீட்டின் அடிப்படையில், வழக்கின் பிரதிவாதிகளை எதிர்வரும் ஜனவரி 04ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா உத்தரவிட்டார்.

இவ்வழக்கு, பாலமுனை ஊர்மக்கள் சார்பில் அவ்வைத்தியசாலை அமைந்துள்ள பிரதேசத்தைச் சேர்ந்த, சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், ஏ.ஏல். அலியார், எஸ். ஆபிதீன். ஏ.எல். ஹஸ்மீர், பி.எம். ஹுஸைர் ஆகிய ஐவர் இணைந்து தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வழக்கிற்கான சட்ட உதவியை குரல்கள் இயக்கம் (Voice Movement) வழங்கியிருந்ததோடு, அவ்வமைப்பின் சட்டத்தரணிகளான அக்கரைப்பற்றைச் சேர்ந்த றத்தீப் அஹமட், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் மீரா முஹீடீன், யு.எல். வஸீம் ஆகியோர் வாதிகள் சார்பில் முன்னிலையாகியிருந்தனர்.

இவ்வழக்கின் பிரதிவாதிகளாக, பாலமுனை கொவிட்-19 சிகிச்சை நிலையத்தின் பொறுப்பதிகாரி வைத்தியர் நெளபல், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அகிலன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி. சுகுணன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ. லதாகரன் ஆகிய நால்வர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த வழக்கைத் தாக்கல் செய்தவர்களில் ஒருவரான, சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் கருத்து தெரிவிக்கையில்,

மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஜனாஸா எரிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தன. , இதன்போது, கொரோனாவினால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் நிலையில், அதன் மூலமாக நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் காணப்படுவதாக, சுகாதார பிரிவினால் முன்வைக்கப்பட்ட சத்திய ஓலை மூலம் முன்வைக்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, குறித்த அடிப்படை உரிமை மீறல் வழக்கின் முடிவுகளின் அடிப்படையில் குறித்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்த சட்டத்தரணி அன்ஸில், ஜனாஸா எரிப்புக்கு எதிரான வழக்கில் இது தொடர்பில் காட்டித் தந்த அதிகாரிகளுக்கு இதன் மூலம் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

எனவே, இவ்வாறான சிகிச்சை நிலையங்கள் நாட்டின் எந்தவொரு இடத்திலும் அமைக்கப்படக் கூடாது எனத் தெரிவித்த அவர், இதன் மூலமே இந்நாட்டின் நிலக்கீழ் நீரை பாதுகாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

அவ்வாறில்லை எனில், குறித்த நியாயத்தின் அடிப்படையில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனும் நோக்கத்தில் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...