பயணிகள் போக்குவரத்து பஸ், ரயில்களில் 400 பொலிஸார்

நேற்று முதல் சிவில் உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு

தனிமைப்படுத்தலுக்கான சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் பயணிகள் போக்குவரத்து பஸ்களை கண்காணிப்பதற்காக சிவில் உடையில் 400 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பயணிகள் பஸ்களில் சுகாதார வழிகாட்டல் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா? சாரதி மற்றும் நடத்துனர்களின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன? என்பதை கண்காணிக்கும் வகையிலேயே சிவில் உடையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை. தனிமைப்படுத்தலுக்கான சட்டங்களை மீறிய குற்றத்திற்காக கடந்த 24 மணித்தியாலங்களில் 41 நபர்களை கைது செய்துள்ளதாகவும், இதுவரை ஆயிரத்து 611 பேர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை கண்டறியும் வகையில் நேற்று முதல் ரயில்கள் மற்றும் பஸ்களில் சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் பயணிகள் போக்குவரத்து பஸ்களில் மேற்படி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 400 பொலிஸார் சிவில் உடையில் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர்;கொரோனாவைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும் அத்துடன் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் உரிய முறையில் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவே பஸ்கள் மற்றும் ரயில்களில் போலீசார் சிவில் உடைகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம் 

 


Add new comment

Or log in with...