நீர்கொழும்பில் வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ நாட்டை கட்டியெழுப்பும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் வீடில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வேலைத் திட்டத்தின் வழிகாட்டலில் கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அண்மையில் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் ‘உங்களுக்கு வீடு, நாட்டுக்கு எதிர்காலம்’ திட்டத்தின் கீழ் உருவான புதிய இல்லங்களை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டட பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்கஅமைச்சர் இந்திக்க அனுருத்த, மேல்மாகாண சபை கம்பஹா மாவட்ட முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.சகாவுல்லா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

“பொதுமக்களின் மிகவும் பலமான ஆசிர்வாதத்துடன் ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ள எமது அரசு மக்களின் வீடமைப்புப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் திட்டமிடப்பட்ட அடிப்படையில் வருடாந்த இலக்குடன் செயலாற்றி வருகின்றது. மக்களுக்கு குடியிருப்பதற்கு வசதியான வீடுகளை நாம் பெற்றுக் கொடுப்போம். எமது அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களை தேசிய பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும் நிறுவனங்களாக மாற்றியமைத்து வருகிறோம்.

பல நிறுவனங்கள் இலாப மீட்டும் நிறுவனங்களாக மாறியுள்ளன” என நிகழ்வுகளில் கலந்து கொண்ட கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.சகாவுல்லாவினால் வீடமைப்பு உதவிக்கான காசோலைகளும் கையளிக்கப்பட்டன.

 

-எம்.எஸ்.எம்.முன்தஸிர்
(பாணந்துறை மத்திய குறூப்நிருபர்)


Add new comment

Or log in with...