மஹர அமைதியின்மை; 4 கைதிகளின் உடல்களை தகனிக்க உத்தரவு

மஹர அமைதியின்மை; 4 கைதிகளின் உடல்களை தகனிக்க உத்தரவு-Mahara Prison Shooting Court Ordered to Cremate 4 Bodies of Inmates

- குறித்த நால்வரும் துப்பாக்கிச் சூட்டிலேயே மரணம்

மஹர சிறையில் கடந்த நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின்போது, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 11 பேர் மரணடைந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்கள் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதற்கமைய, குறித்த நபர்கள் அனைவரும் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது.

அதன் அடிப்படையில், அவர்களது உடல்களை தகனம் செய்ய அரசாங்கம் முடிவு செய்திருந்த நிலையில், உடல்களை எரித்து அழிப்பதன் மூலம் மஹர சம்பவம் தொடர்பான விசாரணைகளில் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு விடும் எனத் தெரிவித்து, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

எனவே இது தொடர்பில் குறித்த சடலங்களின் பிரேதப் பரிசோதனையை விரைவாக நிறைவு செய்யும் வகையில், ஐவரடங்கிய விசேட நிபுணர் குழுவொன்றை நியமிக்க இணக்கம் காணப்பட்டது.

குறித்த விசேட நிபுணர் குழுவில், சட்ட வைத்திய விசேட நிபுணர்கள் 4 பேர் மற்றும் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தின் ஆயுதங்கள் தொடர்பான விசேட நிபுணர் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

குறித்த நபர்களின் சடலங்களை அடக்கம் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (16) வத்தளை நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றையதினம் (16) குறித்த கைதிகள் 11 பேரில் நால்வரினது பிரேதப் பரிசோதனை அறிக்கை மன்றில் கையளிக்கப்பட்டது.

இதன்போது, மரணித்த கைதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட சடலங்களை அடக்கம் செய்வதற்காக உறவினர்களிடம் கையளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஆயினும், இதன்போது அரசாங்கம் சார்பில், CID திணைக்கள அதிகாரிகளுடன் சட்ட மாஅதிபரின் இணைப்பதிகாரி, நிஷாரா ஜயரத்ன, அதற்கு எதிர்ப்பை வெளியிட்டார்.

குறித்த சடலங்களால் சுகாதார பிரச்சினை ஏற்படலாம் எனவும், அவற்றை தொடர்ந்தும் உரிய முறையில் பேணிப் பாதுகாப்பதற்கான இடவசதிகள் தற்போது IDH வைத்தியசாலையில் இல்லை எனவும் தெரிவித்ததோடு, அவற்றை அடக்கம் செய்வது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் முறைமையொன்று ஏற்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

எனவே, 2020 ஏப்ரல் 11ஆம் திகதி சுகாதார அமைச்சினால்.. வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானிக்கு அமைய, உரிய வெப்பநிலையில், அவ்வுடல்களை தகனம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

அதற்கமைய, இரு தரப்பு வாதங்களை கருத்திலெடுத்த வத்தளை நீதவான், அவற்றை இன்றும் (16) நாளையும் (17) தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.

இதேவேளை, மஹர சிறையில் இடம்பெற்ற அமைத்தியின்மை தொடர்பில் CIDயினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, நேற்று (15) 35  பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதுவரை 344 பேரிடம் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டிய அவர், இவர்களில் சிறை அதிகாரிகள் 104 பேர், சிறைக்கைதிகள் 147 பேர், வைத்தியர்கள் 09  பேர், தாதியர் 17  பேர் உள்ளடங்குவதாக தெரிவித்தார்.

விசேடமாக குறித்த கலகத்தை ஏற்படுத்த முயற்சி செய்த சந்தேகநபர்களை CID யினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, குறித்த 4 பேரும் துப்பாக்கிச்சூடு காரணமாகவே உயிரிழந்துள்ளமை, பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக, மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...