மஹர சிறைச்சாலை சம்பவம்; நேற்று வரை 116 பேரிடம் வாக்குமூலம் பதிவு

- ஆறு சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் இதுவரை 116 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேற்படி சம்பவத்தில் மரணமடைந்த சிறைக் கைதிகளில் இதுவரை 6 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் நேற்று தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரண்டு பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் மேலும் நால்வரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற குழப்பகரமான சம்பவங்களில் 11 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் 6 பேரின் சடலங்கள் அவர்களின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கிணங்க மரணமடைந்தவர்கள் ஜா-எல,வெலிவேரிய, ஹுணுப்பிடிய, அங்குருவா தொட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு தலைமைத்துவம் வழங்கியவர்கள் அதற்கு உறுதுணையாக செயற்பட்டவர்கள் ஆகியோரை இனங்காணும் வகையிலேயே மேற்படி விசாரணைகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...