கடமைக்கு இடைஞ்சல், PHI மீது உமிழ்ந்தார்; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கடமைக்கு இடைஞ்சல், PHI மீது உமிழ்ந்தார்; சந்தேகநபருக்கு விளக்கமறியல்-Obstruted the Duties-Spat on PHI-Atulugama-Arrested-Remanded

- அட்டுலுகமவில் நேற்றுமுன்தினம் 98 பேர் அடையாளம்

பண்டராகம, அட்டுலுகம பகுதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்ல வந்த பொதுச் சுகாதார பரிசோதகர் மீது உமிழ்ந்ததாக தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட குறித்த நபரை, சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர் நோயாளர் காவு வண்டியில் அழைத்துச் செல்ல முயன்ற வேளையில், உரிய ஒத்துழைப்பு வழங்காது, அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுமுன்தினம் (02) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் இன்று (04) முற்பகல் 9.20 மணியளவில், குறித்த சந்தேகநபர் பண்டாரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர், பாணந்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் வீடியோ தொழில்நுட்பம் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு, குறித்த சந்தர்ப்பத்தில், பொதுச் சுகாதார அதிகாரி மற்றும் சுகாதாரப் பிரிவினரும் இணைக்கப்பட்டிருந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தினால் டிசம்பர் 17 வரை சந்தேகநபருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டதோடு, சந்தேகநபரை சுகாதார பாதுகாப்பு நடைமுறைக்கு அமைய, வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் மீது தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்ததாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (02) களுத்துறை மாவட்டத்தில் 106 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டதோடு, அதில் 98 பேர் அட்டுலுகம பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...