பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம், பணிக்குழாம் பிரதானி நியமனம்

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம், பணிக்குழாம் பிரதானி நியமனம்-Kushani Rohanadheera Appointed as the Deputy Secretary General & Chief of Staff of Parliament

சட்டத்தரணி திருமதி. குஷானி ரோஹணதீர பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணிக்குழாம் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவின் பரிந்துரைக்கு அமைய, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணிக்குழாம் பிரதானியாக பணியாற்றிய நீல் இத்தவல, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திருமதி. குஷானி ரோஹணதீர இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். 

திருமதி. ரோஹணதீர, 2012 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகமாக (நிர்வாகம்) பதவி வகித்ததுடன், 1999 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அதிகாரியாக இலங்கை பாராளுமன்ற சேவைக்கு இணைந்துகொண்டார். 

அம்பலாங்கொடை தர்மாஷோக்க வித்தியாலயத்தின் புகழ்பெற்ற பழைய மாணவியான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளார். அதனை அடுத்து இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை இளமானிப்பட்டத்தை பூர்த்தி செய்த இவர், சட்டக் கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றி சட்டத்தரணியாக உயர்நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.


Add new comment

Or log in with...