பூர்வீக நிலங்களில் மீள்குடியேறும் மக்களின் கனவு நனவாக வேண்டும்

இந்த அரசில் அது நிறைவேற்றப்பட வேண்டும் −அங்கஜன்

பூர்வீக நிலங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டுமென்ற எமது மக்களின் நீண்டகால கனவு இந்த அரசாங்கத்திலாவது நிறைவேற்றப்பட வேண்டும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த விடயத்தில் அக்கறையுடன் செயற்படுவார்களென்ற நம்பிக்கையுள்ளதாக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் யுத்தம் முடிவடைந்து மீள கட்டியெழுப்பப்பட்டு வருகின்றன. வறுமை மாவட்டங்களாக இவை உள்ளதுடன், இன்னமும் மீள் குடியேற்றமும் செய்யப்பட்டு வருகின்றன. வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றுத் கிளிநொச்சி மாவட்டங்கள் அதிக சனத்தொகை கொண்ட மாவட்டங்களாக உள்ளன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுகளின் தனிப்பட்ட அக்கறை இந்த மாவட்டங்கள் மீது அவசியமாகும்.

யாழ்.மாவட்டத்தில் ‘முலோபாய நகர அபிவிருத்தி” என்ற வேலைத்திட்டத்தை 2014ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாகவிருந்த சந்தர்ப்பத்தில் 65 மில்லியன் டொலர் செலவில் முன்னெடுக்க திட்டமிட்டிருந்தார். இதன்மூலம் யாழ்.நகரை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த நான்கு வருடத்தில் போதியளவு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. வேலைத்திட்டத்தை கைவிடும் நிலை காணப்பட்ட சூழலில் மீண்டும் அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அமைச்சர் இணங்கியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நான்கு பிரதான கேந்திர மாவட்டங்களாக யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, அம்பாந்தோட்டையை தெரிவுசெய்துள்ளார். ஆகவே, இந்தத் திட்டத்தின் அவசியம் இன்னமும் உள்ளது.

அதேபோன்று நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் வீடுகளை கட்ட கடன்களைப் பெற்றுக்கொண்டவர்கள் இன்னமும் வீடுகளை கட்ட முடியாத சூழலில் உள்ளனர். இவர்கள் தமது நகைகளை அடகுவைத்து தற்போது கொட்டில் வீடுகளில் வாழ்கின்றனர்.

இந்த நிலையை மாற்ற எமது அரசாங்கம் மனிதாபிமான ரீதியில் செயற்படும். எதிர்வரும் வருடத்தில் வீடுகள் அனைத்தும் முழுமைப்படுத்தப்படுமென்ற நம்பிக்கை எமக்குள்ளது. னாதிபதி, பிரதமர், மற்றும் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஆகியோரிடம் தாழ்மையான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறேன். எமது மாவட்டங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்போது மீள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. மீள்குடியேற்றம் இன்னமும் முழுமைப்படுத்தப்படவில்லை. வசாவிலான், பலாலி போன்ற பிரதேசங்கள் விடுக்கப்படவில்லை. அவற்றை விடுவிக்க வேண்டிய தேவை உள்ளது. பூர்வீக நிலங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டுமென்ற எமது மக்களின் நீண்டகால கனவு இந்த அரசாங்கத்திலாவது நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...