நைஜீரியாவில் கொல்லப்பட்ட விவசாயிகள் 110 ஆக உயர்வு | தினகரன்

நைஜீரியாவில் கொல்லப்பட்ட விவசாயிகள் 110 ஆக உயர்வு

வடகிழக்கு நைஜீரியாவில் 110 விவசாயிகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஐ.நா உறுதி செய்துள்ளது. முன்னதாக 43 பேரே கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது.

பதற்றம் கொண்ட போர்னோ மாநலத் தலைநகரான மைடிகுரிக்கு அருகில் இருக்கும் கிராமம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

‘தமது வயல்களில் அறுவடையில் ஈடுபட்டிருந்த ஆண்கள் மற்றும் பெண்களை மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்’ என்று நைஜீரியாவின் ஐ.நா மனிதாபிமான இணைப்பாளர் எட்வர் கலோன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எதிராக இந்த ஆண்டில் இடம்பெற்ற மிகக் கொடிய தாக்குதலாக இது இருப்பதாகவும் இந்த கொடூரச் செயலைச் செய்தவர்கள் நீதிக்கு முன் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் பொறுப்பேற்காதபோதும் பொக்கோ ஹராம் குழு மற்றும் அதில் இருந்து பிரிந்த மேற்கு ஆபிரிக்க மாகாண இஸ்லாமிய அரசுக் குழு அண்மைய ஆண்டுகளில் இங்கு கொடிய தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...