இயேசுவும் தோமாவும் நாமும்

சீனாவின் பெரு நகர் ஒன்றில்சென்ற ஆண்டில் தோன்றிய வைரஸ் ஒன்று கடந்த ஒரு வருடமாக உலகின் பல நாடுகளில் மக்களை அவரவர் வீடுகளில் சிறைப்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் பற்றிய உறுதியான, முழுமையான, அறிவியல் விபரங்கள் இல்லாத நிலையில், இக்கிருமி தொடர்பில் பல்வேறு வதந்திகள் கட்டுக்கடங்காமல் வலம் வருகின்றன. இந்த வைரஸின் பாதிப்புகள் குறித்து செய்திகள் ஒவ்வொருநாளும் வெளி வரும் தகவல்கள் நமக்குள் அச்சத்தையும், சந்தேகத்தையும் வளர்த்து வருகின்றன.

அச்சம், கலக்கம், சந்தேகம் ஆகிய உணர்வுகளுடன் நாம் போராடிவரும் இச்சூழலில், இயேசுவின் சீடர்களில் ஒருவர், சந்தேகத்தின் பிடியில் சிக்கித்தவித்த நிகழ்வை தாய் திருச்சபை நமக்கு நற்செய்தியாக (யோவான் 20:19-31) வழங்கி நம்மை சிந்திக்க அழைக்கிறது.

இரக்கமும் சந்தேகமும் ஒன்றையொன்று சந்தித்ததையும் சந்தேகத்தை இரக்கம் வென்றதையும் இறை இரக்கத்தின் ஞாயிறன்று கொண்டாடுகிறோம்.

இறை இரக்கம், அல்லது இறைவனின் பேரன்பு என்ற கதிரவன் எழும்போது சந்தேகப் பனிமூட்டம் கலைந்துவிடும் என்பதை நற்செய்தி எடுத்துரைக்கிறது.

உயிர்த்த இயேசு, இன்று நம்முன் தோன்றினால் உடனே,அவர் திருவடி பணிந்து நம் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வெளியிட நமக்கு எவ்விதத் தயக்கமும் இருக்காது.

இயேசு உயிர்த்தெழுந்த அந்த முதல் உயிர்ப்பு நாளும் ஒரு திருவிழாவாக இருந்ததா என்பதே சந்தேகம்தான். உயிர்த்த இயேசுவை, சீடர்கள் சந்தித்த நிகழ்வுகள் அனைத்திலும்அடிப்படையில் இழையோடிய ஓர் உணர்வு சந்தேகம்.

இந்நிகழ்வுகள் அனைத்தின் சிகரமாகநாம் நற்செய்தியில் காண்பது சந்தேகம் கொண்டிருந்த தோமாவை இயேசு சந்தித்த அழகான நிகழ்ச்சி.

நம் வாழ்வை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளிலேயே அதிக ஆபத்தானது சந்தேகம்தான். சந்தேகம் ஓர் உணர்வா என்று கூட நம்மில் சிலர் சந்தேகப்படலாம். சந்தேகம் ஒரு தனி உணர்வு அல்ல, மாறாக அதை ஒரு கூட்டு உணர்வு என்று நாம் எண்ணிப்பார்க்கலாம்.

சந்தேகம் பல உணர்வுகளின் பிறப்பிடம். சந்தேகம் குடிகொள்ளும் மனதில் கூடவே பயம், கோபம், வருத்தம், விரக்தி என்ற பல உணர்வுகள், கூட்டுக்குடித்தனம் செய்யும்.

சந்தேகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக, விவிலியத்தில் கூறப்படும் ஒரு மனிதர், தோமா. உண்மை பேசும் எவரையும் "அரிச்சந்திரன்" என்றும் தாராள மனதுடையவரைப் "பாரி வள்ளல்" என்றும் அழைக்கிறோமே அதேபோல் சந்தேகப்படும் யாரையும், “சந்தேகத் தோமையார்” என்று அழைக்கிறோம். அவ்வளவு தூரம் தோமா சந்தேகத்தின் மறுபிறவியாக அடையாளமாக மாறிவிட்டார்.

தோமா, இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும், நம்மில் பலர், உடனே, ஒரு நீதியிருக்கை மீது அமர்ந்துகொள்கிறோம்.

"என்ன மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட முடிந்தது?" என்ற கேள்வியை கேட்டு, "தோமா இப்படி நடந்துகொண்டது தவறு" என்ற தீர்ப்பையும் எழுதிவிடுகிறோம்.

நீதியிருக்கைகளில் ஏறி அமர்வதும் அடுத்தவர் மீது தீர்ப்பை எழுதுவதும் எளிது. ஒரு விரலை நீட்டி தோமாவை குற்றவாளி என்று சுட்டிக்காட்டும்போது, மற்ற மூன்று விரல்கள் நம்மை நோக்கித் திரும்பியுள்ளதை எண்ணி கொஞ்சம் நிதானிப்போம்.

இயேசுவின் உயிர்ப்பைப்பற்றி தலைமுறை, தலைமுறையாய் ஆயிரமாயிரம் விளக்கங்களை வழங்கிவரும் கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் பிறந்து வளர்ந்துள்ள நமக்கே அந்த உயிர்ப்பு குறித்த விசுவாசத்தில் அவ்வப்போது தடுமாற்றம் ஏற்படுகிறது.

அப்படியிருக்க உயிர்ப்பைப்பற்றி தெளிவற்ற எண்ணங்கள் கொண்டிருந்த யூத சமுதாயத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வளர்ந்த சீடர்களில் ஒருவர், இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகித்தார் என்பதற்காக அவரைக் கண்டனம் செய்வது தவறு. தீர்ப்பிடுவதும் தவறு.

கல்வாரியில் இயேசு இறந்ததைநீங்களோ, நானோ நேரடியாகப் பார்த்திருந்தால் ஒருவேளைதோமாவை விட இன்னும் அதிகமாய் மனம் உடைந்து போயிருப்போம். அந்த கல்வாரி பயங்கரத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும் வந்திருப்போம். எனவே, தீர்ப்பு வழங்க நாம் அமர்ந்திருக்கும் நீதி இருக்கைகளிலிருந்து முதலில் எழுவோம்.

குற்றவாளிக் கூண்டில் நாம் நிறுத்தியுள்ள தோமாவின் நிலையில் நம்மை நிறுத்தி இந்த நிகழ்வைச் சிந்திப்போம்.

உயிர்த்த இயேசுவைக் கண்டதும், ஏனைய சீடர்களுக்கும் கலக்கம், குழப்பம், சந்தேகம் எழுந்தன என்பதை நற்செய்திகள் கூறுகின்றன (மத்தேயு 28:17; மாற்கு 16:13-14; லூக்கா 24:37-39). இயேசுவிடம் கேட்கமுடியாமல் மற்ற சீடர்கள் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த சந்தேகத்தைத்தான் தோமா வாய்விட்டுச் சொன்னார். எனவே தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி என்று கண்டனம் செய்யாமல், எல்லாச் சீடர்களுமே சந்தேகத்தில் பயத்தில் வாழ்ந்துவந்தனர் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். சீடர்களின் பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது.

தங்கள் குடும்பங்களையும் மீன் பிடிக்கும் தொழிலையும் விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இச்சீடர்கள்.

மூன்று ஆண்டுகளில் இயேசுதான் தங்களது உலகம் என்று, நம்பிவந்தனர். அவர்கள் கண்ணும் கருத்துமாய் வளர்த்துவந்த நம்பிக்கை மரம், ஆணி வேரோடு பிடுங்கப்பட்டுசிலுவையில் தொங்கவிடப்பட்டது.

இயேசுவை அடித்தளமாய் வைத்து, அவர்கள் கட்டியிருந்த கனவுக் கோட்டைகளெல்லாம் தரை மட்டமாக்கப்பட்டன. எருசலேமில், கல்வாரியில், அவர்கள் கண்ட காட்சிகள் அவர்களை முற்றிலும் நிலை குலையச் செய்துவிட்டன.

இயேசுவின் கொடுமையான மரணம் அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, சந்தேகமும் பயமும் நிரப்பிவிட்டன. யாரையும் எதையும் சந்தேகப்பட்டனர். உரோமைய அரசும் மதத் தலைவர்களும் தங்களைத் தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

ஜெரோம் லூயிஸ்


Add new comment

Or log in with...