கடவுள் நம்மைவிட மிகவும் பொறுமையுள்ளவர் | தினகரன்

கடவுள் நம்மைவிட மிகவும் பொறுமையுள்ளவர்

- திருத்தந்தை பிரான்சிஸ்

“கடவுள், நம்மைவிட மிகவும் பொறுமையுள்ளவர், அவரது இதயத்தை, நம்பிக்கை மற்றும், விடாமுயற்சியோடு தட்டுகிறவர்கள், ஏமாற்றம் அடையமாட்டார்கள்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தமது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 13 கர்தினால்களை கடந்த நவம்பர் 28 சனிக்கிழமை வத்திக்கான் புனித பேதுரு பஸ்லிக்கா பேராலயத்தில் கர்தினால்கள் அவையில் இணைக்கும் திருவழிபாட்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றினார்.

புதிய கர்தினால்களுக்கு தொப்பி, மோதிரம் ஆகியவற்றையும் திருத்தந்தை அதன்போது கையளித்தார்.

அத்துடன், திருவருகைக்கால முதல் ஞாயிறாகிய நவம்பர் 29 ம் திகதி வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் புதிய கர்தினால்களோடு திருத்தந்தை பிரான்சிஸ் சிறப்பு கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினார்.

கொவிட்19 வைரஸ் நோய் நிலவரத்தை கருத்திற்கொண்டு இவ்விரு நிகழ்வுகளிலும் மிகக் குறைந்த பங்கேற்பாளர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக வும் இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து, கர்தினால்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் வரவேற்பு நிகழ்வுகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, ஜெனோவா உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், இஸ்பெயின் நாட்டிற்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதராகப் பணியாற்றும் Majid Al-Suwaidi ஆகியோர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வெள்ளியன்று திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

மேரி தெரேசா


Add new comment

Or log in with...