தாழமுக்கம் சூறாவளியாக மாறலாம் என எச்சரிக்கை!

தாழமுக்கம் சூறாவளியாக மாறலாம் என எச்சரிக்கை!-Warning for the Depression in the South East Bay of Bengal Sea Area

- நாளை இலங்கையின் கிழக்கு கரையை அடையும் சாத்தியம்!
- கடல் கொந்தளிப்பாக காணப்படும்; 80-100 கி.மீ. வேகத்தில் காற்று
- வடக்கு, கிழக்கில் 200 மி.மீ. வரை பாரிய மழை
- நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆங்காங்கே மழை

தென்கிழக்குவங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து இன்று (01) அதிகாலை 5.30 மணிக்கு திருகோணமலைக்கு தென்கிழக்காக சுமார் 530 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்ததாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தொகுதியானது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைந்து சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அது பெரும்பாலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் முல்லைத்தீவுக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை நாளை (02) மாலையளவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 200 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும், ஒரு சில இடங்களில்100 மி.மீ. இற்கும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்ப்பு
வடக்கு, வடமத்திய கிழக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, நாடு முழுவதிலுமுள்ள கடல் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும், மணிக்கு 80-100 கி.மீ. வேகத்தில் காற்று வீசலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2020 டிசம்பர் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

தென்கிழக்குவங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு  தாழமுக்கமாக விருத்தியடைந்து நேற்று (30ஆம் திகதி) 2330 மணிக்கு திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 590 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது. இத் தொகுதியானது அது அடுத்த 06 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான  தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் தொடர்ந்து வரும் 12 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது பெரும்பாலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் முல்லைத்தீவுக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை நாளை (02ஆம் திகதிமாலையளவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அதற்கிணங்க, அடுத்த சில நாட்களுக்கு வட அகலாங்குகள் 05N - 12N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 82E – 92E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் மணித்தியாலங்களில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை, சடுதியாக அதிகரிக்கும் காற்று, கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான கடல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

இலங்கைக்கு கிழக்காக உள்ள கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் (05N – 12N, 82E – 92E) கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தால் அடுத்த சில நாட்களுக்கு வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக  அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

மழை நிலைமை:

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து கொழும்பு ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலையுடன் காணப்படும். காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக அல்லது கொந்தளிப்பாகக் காணப்படும். காலியிலிருந்து கொழும்பு ஊடாக புத்தளம் வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலைமற்றும்மட்டக்களப்பு ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் கடல் அலைகள் 2.0 - 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

PDF File: 

Add new comment

Or log in with...