தொழில்நுட்பக் குழு அனுமதி வழங்குமென்ற நம்பிக்கையில்லை

- முஸ்லிம்களின் சடலம் எரிப்பு 

முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு தொழில்நுட்ப குழு அனுமதிவழங்குமென்ற நம்பிக்கை எமக்கில்லை. இலங்கையில் அமையபெற்ற ஒவ்வொரு அரசாங்கங்களும் முஸ்லிம்களின் கலாசாரத்தை மதித்துள்ளன. இந்த அரசாங்கமும் முஸ்லிம்களின் கலாசாரத்துக்கு மதிப்பளித்து சாதகமான முடிவொன்றை எடுக்குமென நம்புகிறோமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொவிட் ஒழிப்புக்காக சுகாதாரத்துறையினரும் பாதுகாப்பு படையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்டத்தில் ஒரே ஒரு பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் மாத்திரமே உள்ளது. முழு கண்டி மாவட்டத்திற்கு ஒரு இயந்திரம் போதாது. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று வைத்திய பரிசோதனைகளுக்கான இரசாயன பொருட்களும் உபகரணங்களும் போதாதுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் 19 காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடங்கள் எரிக்கப்படுவது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்திலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும் இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. தொழில்நுட்ப குழுவின் அறிவிப்பு கிடைக்கும்வரை காத்திருப்பதாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் கூறுகிறது. தொழில்நுட்ப குழு மாறுபட்ட நிலைபாட்டை கொண்டிருப்பதால் அக்குழுவின் ஊடாக தீர்வுகிடைக்குமென எமக்கு நம்பிக்கையில்லை.

தொழில்நுட்பக் குழுவை நாம் பல தடவைகள் சந்தித்துள்ளோம். ஒரு சந்தர்ப்பத்தில் சடங்களை நல்லடக்கம் செய்ய குறித்த குழு இணங்கியிருந்தது. அதற்காக மன்னார் பகுதியில் காணியொன்றும் அடையாளங் காணப்பட்டது. ஆனால், பின்னர் அந்தத் தீர்மானத்தை மாற்றிக் கொண்டனர். அரசாங்கம் இந்த விடயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அமையும் ஒவ்வொரு அரசாங்கங்களும் நாட்டிலுள்ள அனைத்து மதங்களுக்கும் கௌரவமளித்திருந்தன. இந்த அரசாங்கமும் முஸ்லிம்களின் கலாசாரத்தை மதிக்குமென நம்புகிறோம் என்றார்.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...