மழைக்காலத்தில் கூந்தலில் ஏற்படும் பாதிப்புகள்

மழைக்காலத்தில் கூந்தலில் ஏற்படும் பாதிப்புகள்-Hair Problem During Rain-Tips

மழைக்காலத்தில் வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பதனால் பக்டீரியாக்கள் செழித்து வளரும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம் செய்யாவிட்டால், நுண்ணுயிர்களின் இனப்பெருக்கத்தினால் மழைக்காலத்தில் பொடுகு, பேன் தொல்லைகள் தலைதூக்குகின்றன.

பொதுவாக பொடுகுடன் தொடர்புடைய மலாசீசியா எனும் பூஞ்சை வகை உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மலாசீசியா கோடை காலங்களில் இனப்பெருக்கம் செய்யத்தொடங்கி மழைக்காலத்தில் வளர்ச்சி யடையத் தொடங்கும். அதனால்தான் மழைக்காலத்தில் உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

மழைக்காலத்தில் அவ்வப்போது ஷெம்பு கொண்டு கூந்தலை கழுவினால் மலாசீசியா வளர்ச்சியை குறைத்து விடலாம். அதற்கு பக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்ட ஷெம்புவை பயன்படுத்தலாம்.

குளித்தாலோ அல்லது மழையில் நனைந்தாலோ உடனடியாக கூந்தலை உலர வைப்பது முக்கியமானது. ஏனென்றால், அதிகப்படியான ஈரப்பதம் பக்டீரியா, பூஞ்சை மற்றும் பேன் வளர்ச்சி அடைவதற்கு உகந்ததாக இருக்கும். ஒருபோதும் தலைமுடி ஈரமாக இருக்கும்போது பின்னக்கூடாது.

ஈரப்பதம் மயிர்க்கால்களை பலவீனமாக்கிவிடும். அதனால் தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பு கொண்டு சீவக்கூடாது. தேவைப்படும் பட்சத்தில் அகன்ற பற்களை கொண்ட சீப்பை உபயோகிக்க வேண்டும். அது தலைமுடி அதிகம் பாதிப்படைவதை தடுக்கும்.

ஹெயார் ஸ்பிரே, ஜெல் போன்ற செயற்கை கூந்தல் தயாரிப்பு பொருட்களை மழைக்காலத்தில் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவை மழைக்காலத்தில் தலைமுடி மற்றும் உச்சந்தலையை மேலும் சேதப்படுத்தும்.

தலைமுடி ஆரோக்கியத்திற்கு பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள் மற்றும் புரதம் அவசியம். முட்டை, கீரை, கொழுப்பு நிறைந்த மீன், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தயிர், சோயா பீன்ஸ் போன்றவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மழைக்காலத்தில் உடல் குளிர்ந்து போனாலும் கூந்தல் வறட்சித்தன்மையுடன்தான் காணப்படும். அதனால் கோடை காலத்தில் மட்டுமல்ல மழைக்காலத்திலும் ஹெயார் கண்டிஷனர்களை உபயோகப்படுத்த வேண்டும்.

முட்டையும், தயிரும் சிறந்த இயற்கை ஹெயார் கண்டிஷனராக செயற்படக்கூடியவை. அகன்ற பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிவிட்டு அதனுடன் மூன்று டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனை தலையில் தேய்த்துவிட்டு அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவவும் இதன் மூலம் முடி உதிர்வு, முடி வெடிப்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைத்து விடலாம்.

ஆப்பிள் சிடர் வினிகரும் சிறந்த ஹேர் கண்டிஷனராக செயல்படக்கூடியது. ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து தலையில் தடவி வரலாம். இது கூந்தலை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.

கற்றாழை ஜெல்லும் கூந்தலை பொலிவாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும். 3 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய்யை கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துவிட்டு கூந்தலில் தடவலாம். உலர்ந்ததும் கூந்தலை நீரில் அலசி விடலாம்.


Add new comment

Or log in with...