இலங்கையின் கலைஇலக்கியத் துறையில் மாபெரும் ஆளுமை கலைமகள் ஹிதாயா

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலக்கிய வானில் பிரகாசித்த கலைத்தாரகையின் திடீர் மறைவு  ஏற்படுத்தியுள்ள துயரம்

இலங்கை தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக சர்வதேசம் வரை தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் எழுத்தாளர் கவிதாயினி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி. இவர் தமிழ் இலக்கியத் துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அளப்பரிய பங்களிப்பை நல்கியுள்ளார். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், 'கலைமகள் ஹிதாயா', 'கலைமகள் ஹிதாயா ரிஸ்வி', 'ஹிதாயா மஜீத்', 'மருதூர் நிஸா' என்ற புனைபெயர்களில் இலக்கிப் படைப்புகளை அளித்துள்ளார். இவரது இயற்பெயர் ஹிதாயா மஜீத்.

சாய்ந்தமருது யூ. எல். ஏ. மஜீத்- ஸைனப் தம்பதியினருக்கு மகளாக 1966ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இவர் பிறந்தார். இவர் கல்முனை மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டிய முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் கல்எளிய அரபுக்கலாபீடத்தில் கல்வி பெற்ற ஒரு மௌலவியா ஆவார்.

பாடசாலையில் கல்வி கற்கும் போதே கலை, இலக்கிய உலகில் கால் பதித்த கலைமகள் ஹிதாயாவின் முதலாவது கவிதை அவரது 13 வது வயதில் (1982 இல்) வௌியானது. இவரது 'மீண்டும்' என்ற புதுக்கவிதையும், 'அன்னை' என்ற மரபுக்கவிதையும் ஒரே நாளில் வெவ்வேறு பத்திரிகைளில் வௌியாகின. இது இவரது இலக்கிய ஆர்வத்திற்கு உந்து சக்தியானது. அதனைத் தொடர்ந்து புதுக்கவிதை, மரபுக்கவிதை என்றில்லாமல் சிறுகதை, கட்டுரை, நெடுங்கதை, மெல்லிசைப் பாடல், விமர்சனம் என பல துறைகளிலும் தம் பங்களிப்புக்களை நல்கலானார்.

பெண்களின் கல்வி, உரிமைகள், சமூகப் பிரச்சினைகள் எனப் பல தளங்களிலும் படைப்புகளை வெளிக்கொணர்ந்து, அவற்றுக்கு நியாயமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்டினார். அதனால் இவரது படைப்புகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைக்கப் பெற்றது.

குருநாகல், பொல்காவலையைச் சேர்ந்த எம். ஆர். எம். ரிஸ்வியுடன் இவர் திருமண வாழ்வில் இணைந்து நான்கு பிள்ளைகளுக்கு தாயாரானார். ஹிதாயா ரிஸ்வி குடும்ப வாழ்வில் பிரவேசித்த போதிலும் தம் கலை, இலக்கியப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்கலானார். அவருக்கு கணவர் பக்கபலமாகவும் ஊக்கமளிப்பவராகவும் இருந்தார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ள இவர் 'நாளையும் வரும்' என்ற பெயரில் புதுக்கவிதைத் தொகுதியொன்றையும் 'தேன் மலர்கள்' என்ற பெயரில் மரபுக் கவிதைத் தொகுதியொன்றையும் வௌியிட்டுள்ளார். அத்தோடு 'இரட்டை தாயின் ஒற்றைக் குழந்தை' என்ற புதுக்கவிதைத் தொகுதியை கவிஞை மஸீதா புன்னியாமினுடன் இணைந்து 2000 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இவற்றுடன் கண்டி சிந்தனை வட்டத்தின் கவிதைத் தொகுதிகளான 'புதிய மொட்டுகள்', 'அரும்புகள்' ஆகியவற்றிலும், காத்தான்குடி கலை இலக்கிய வட்ட வெளியீடான 'மணிமலர்கள்' மரபுக்கவிதைத் தொகுதியிலும், சாய்ந்தமருது நூல் வெளியீட்டுப் பணியகத்தின் வெளியீடான 'எழுவான் கதிர்களிலும்' இன்னும் பல தொகுதிகளிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றன. 30 சிறுகதைகளையும் 100 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் நூல் மதிப்புரைகளையும் இவர் எழுதியுள்ளார்.

இவரது படைப்புகள் தினகரன், தினகரன் வாரமஞ்சரி, சிந்தாமணி, தினபதி, வீரகேசரி, தினக்குரல், மித்திரன், நவமணி போன்றவற்றிலும் மல்லிகை, ஞானம், பாசமலர், தூது, அல்ஹஸனாத், கலைச்சுடர், இனிமை, கொழுந்து, சிரித்திரன், புதிய உலகம், சுவர், பூ, தூரிகை, யாத்ரா, விடிவு, நயனம், காற்று, கலை ஒளி, நவரசம், புதுயுகம், தினமுரசு, பார்வை, அழகு, இளநிலா, கண்ணாடி, மருதாணி, உண்மை உதயம், நிதாஉல் இஸ்லாம் ஆகிய சஞ்சிகைகளிலும் இந்தியாவிலிருந்து வெளிவரும் 'சமரசம்', அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் `தூண்டில்' ஆகிய இதழ்களிலும் வௌிவந்துள்ளன.

இலங்கை வானொலியில் பல நிகழ்ச்சிகளில் குரல் கொடுத்துள்ள இவர் ரூபவாஹினி கூட்டுத்தாபனக் கவியரங்குகளிலும் பங்கு கொண்டுள்ளார். இலங்கை வானொலி மாதர் மஜ்லிஸ் பிரதித் தயாரிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்

கலை, இலக்கியத்தின் மீது கொண்டிருந்த ஆர்வம் காரணமாக 'தடாகம்' என்ற பெயரில் சஞ்சிகையொன்றை வௌியிட்டு வந்தார். அதன் ஊடாக புதிய எழுத்தாளர்களின் எழுத்துலகப் பிரவேசத்துக்கு களம் அமைத்துக் கொடுத்தார். எழுத்துலகிற்கு புதியவர்களை அறிமுகப்படுத்துவதில் அதிக அக்கறையாக செயற்பட்டார். அதற்குத் தேவையான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார். 'தடாகம் கலை இலக்கிய வட்டத்தை ஸ்தாபித்து அதன் அமைப்பாளராகச் செயற்பட்டார். இவ்வட்டத்தின் ஊடாக பல நூல்கள் வௌியிடப்பட வழிவகை செய்த இவர், சில நூல்களின் வெளியீட்டு விழாக்களையும் நடத்தியுள்ளதோடு பல எழுத்தாளர்களைக் கௌரவித்துமுள்ளார். ஹிதாயா ரிஸ்வி கொழும்பு, வெள்ளவத்தையில் நாகபூசணி கருப்பையாவின் 'நெற்றிக்கண்' கவிதைத் தொகுதியை வெளியிட்டு வைத்தார். தாரிக்கா மர்சூக் எழுதிய 'மனங்களின் ஊசல்கள்' எனும் கட்டுரைத் தொகுதியின் வெளியிட்டு விழாவை குருநாகலிலும், 'இரட்டை தாயின் ஒற்றைக்குழந்தை' கவிதை நூல் வெளியிட்டு விழாவை கண்டியிலும் நடத்தியுள்ளார். பெண்களுக்கான மையத்து குளிப்பாட்டல், கபனிடல் நிகழ்வினை குருநாகல், பொல்காவெலை ஆகிய இடங்களில் நடத்தியுள்ளார்.

கலை, இலக்கியத் துறைக்கு பலவகைகளிலும் பங்களிப்பை நல்கிய இவர், 1988 இல் இளைஞர் சேவைகள் மன்றமும், இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் அகில இலங்கை ரீதியிலும், மாவட்ட ரீதியிலும் முதலாம் இடத்தைப் பெற்று ஜனாதிபதி விருது பெற்றார். 1985 இல் சாய்ந்தமருது இஸ்லாமிய கலை இலக்கிய ஒன்றியத்தின் 'கலைமகள்' விருது, 1999 இல் 'ரத்னதீபம்' விருது, 2002 இல் இளம் படைப்பாளிகளுக்கான விருது, 2007 இல் 'கலை அரசி' விருது, 2009 இல் 'கவித்தாரகை' விருது, 'கலைமுத்து' விருது, 'கவிதைச் சிற்பி' விருது, 'சாமஶ்ரீ தேசக்கீர்த்தி' விருது, 'கலாசூரி', 'சமூக ஜோதி', 'பாவரசு', 'காவியத்தங்கம்', 'இலங்கையின் சிறந்த பெண் கவிஞர்' ஆகிய விருதுகளையும் கௌரவிப்புகளையும் பெற்றுள்ளார்.

இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் நடைபெற்ற கலை இலக்கிய மாநாடுகளிலும் கலந்து கொண்டு பங்களிப்புக்களை நல்கியுள்ளார். 30 வருடங்களுக்கும் மேலாக கலை இலக்கியத் துறைக்கு பெரும் பங்களிப்பு நல்கி வந்துள்ள ஹிதாயா ரிஸ்வி கடந்த திங்களன்று (23.11.2020) இரவு திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ் பேசும் இலக்கிய உலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இறைவன் ' ஜன்னத்துல் பிர்தௌஸ்' என்ற உயர்ந்த சுவர்க்கத்தை அவருக்கு வழங்கிட பிரார்த்திப்போம்.

மர்லின்

மரிக்கார்

 


Add new comment

Or log in with...