கொரோனா தோன்றிய வூஹானில் ஆய்வு மேற்கொள்ள சீனா ஒப்புதல்

புதிய வகைக் கொரோனா வைரஸ் தோன்றிய இடத்துக்கு சர்வதேச வல்லுநர்கள் நேரில் சென்று விசாரணை நடத்த சீனா ஒப்புக்கொண்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வூஹான் நகர கடலுணவுச் சந்தையில் முதலில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் குறித்தும் சந்தையின் அப்போதைய நிலவரம் குறித்தும் சீன ஆய்வாளர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட ஆய்வுகளை நடத்த சர்வதேச வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் சர்வதேச குழு சீனா செல்ல ஏன் இவ்வளவு தாமதம் என்று கேள்வி எழுப்பியுள்ளன.

சர்வதேச குழு சீனா சென்று மேற்கொள்ளவிருக்கும் ஆய்வு நடவடிக்கைகளுக்கான கால வரிசை அட்டவணையை வெளியிடும்படி அவை வலியுறுத்தின.

வூஹான் சந்தையிலிருந்து பெரிய அளவில் வைரஸ் பரவினாலும், அதற்கு முன்பும் சிலரிடம் வைரஸ்தொற்று அடையாளம் காணப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வைரஸ் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவியதா என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்நிலையில், சீன ஆய்வாளர்களின் முதற்கட்ட ஆய்வுமுடிவுகள் முழுமையானவை, வெளிப்படையானவை என்பதை உலக சுகாதார அமைப்பு எவ்வாறு உறுதிசெய்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 


Add new comment

Or log in with...