இந்திய முறையிலான அரசியலமைப்பே எமது இனப்பிரச்சினைக்கான உகந்த தீர்வு | தினகரன்

இந்திய முறையிலான அரசியலமைப்பே எமது இனப்பிரச்சினைக்கான உகந்த தீர்வு

20 வது திருத்தம் தொடர்பாக தமிழர் விடுதலை கூட்டணியின் மாற்று ஆலோசனைகள்

தமிழர் விடுதலைக் கூட்டணியானது பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்படுவதை வன்மையாக எதிர்க்கின்றது. அதேபோல் புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதையும் எதிர்க்கின்றது. அரசியல் சாசனத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் போதுமென எமது கட்சி கருதுகின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அகற்றப்பட்டே ஆக வேண்டும். அதற்கு எமது முழு ஆதரவையையும் கொடுப்போம். அதேபோல எமக்கு வேண்டியதையும் வேண்டாததையும் அடையாளம் கண்டு தற்போதுள்ள அரசியல் சாசனத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும். அதன் மூலம் எமது நடவடிக்கையை இலகுவாக்க முடியும். மிகப் பிரச்சினையான விடயங்கள் காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் போன்றவற்றில் அதிகார பரவலாக்கல் சம்பந்தமானதாகும். அதற்கு சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் தீர்வு காணலாம்.

இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

1972ம் ஆண்டு இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்து உருவாக்கப்பட்ட குடியரசு அரசியல் சாசனத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த 29வது சரத்தோடு சோல்பரி அரசியல் சாசனம் முற்றுமுழுதாக நீக்கப்பட்டது. 1972இல் உருவாக்கப்பட்ட அரசியல்சாசனம் 1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியல் சாசனமாக மாற்றப்பட்டது.

அடிக்கடி அரசியல் சாசனத்தை மாற்றுவது ஏற்புடையதல்ல. இப்போது உருவாக்கப்படப் போகும் அரசியல் சாசனம் எப்போதும் மாற்றப்பட மாட்டாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. இந்திய அரசியல் சாசனத்தில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதும் அடிப்படை அரசியல் சாசனம் அப்படியே இருக்கின்றது. நாம் ஏன் எமது பிரச்சினைகளை அடையாளம் கண்டு எமக்கு ஏற்றவகையில் மாற்றங்களை செய்ய முடியாது?.

இத்தகைய திருத்தங்கள் மூலம் சிறுபான்மையினருடைய தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக அமையும் என்று நம்புகின்றோம். ஒரு காலமும் ஆதரவை பெறாமல் இருக்கப் போகின்ற பல்வேறு பிரேரணைகள் மக்களிடம் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. சில கோரிக்கைகள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரால் ஏற்றுக் கொள்ள முடியாதது. பல அமைச்சர்கள் கூட இக்கோரிக்கைகளை பகிரங்கமாக எதிர்க்கின்றனர். நியாயமாகத் தெரிகின்ற சில பிரேரனைகளைக் கூட எதிர்க்கட்சிகள் மிக வன்மையாக எதிர்க்கின்றன.

உருவாக்கப் போகின்ற அரசியல் சாசனம் பாராளுமன்றத்தை தாண்டிச் செல்லும் என்பது கடினம் என்பது மட்டுமல்ல சர்வஜன வாக்கெடுப்பு நடக்கின்ற வேளையில் பல எதிர்ப்புகளை எதிர்நோக்க வேண்டி வரும். எமது இனப்பிரச்சினைத் தீர்விற்கு இந்திய முறையிலான அரசியல் அமைப்பையே நான் ஆலோசனையாக வழங்குகின்றேன்.

முன்னாள் ஜனாதிபதியும் அன்றைய சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன, நிமல்சிறிபால டி சில்வா மேலும் ஐந்து முன்னாள் அமைச்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மலிக்சமர விக்கிரம ஆகியோரை அன்றைய வேளையில் கூட்டணியின் குழுவினர் சந்தித்து இந்திய முறையிலான அரசியல் அமைப்பை வலியுறுத்தியிருந்தோம். இந்த கோரிக்கையை எதிர்த்து ஒருவரேனும் ஒரு வார்த்தையும் கூறவில்லை என்பது மடடுமல்ல எமது ஆலோசனையை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார்கள்.

ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்ற கொள்கையுடையவன் நான் என்றாலும், அதற்குப் பதிலாக ஏற்புடையதான இந்திய முறையிலான தீர்வை ஏற்பதே பொருத்தமானதாகும் என்ற கருத்தை கொண்டவனாகவே இருந்து வந்துள்ளேன். நாடு பிளவு படாமல் இருப்பதற்கு இந்தியா உத்தரவாதம் தர வேண்டும் என்றும் கோரி வந்துள்ளேன்.

2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் திகதி அலரிமாளிகையில் பேராசிரியர் திஸ்ஸவிதாரன தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் எமது பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போது, சமஷ்டி ஆட்சி முறைமையை எமது இனப்பிரச்சினைக்குத் தீர்வாகப் பெறுவதற்கு நாம் போராடி வந்தது இரகசியமான விடயமல்ல என்பதையும், அதற்கு மாறாக சமஷ்டி என்ற சொல் அநேகருக்கு ஒவ்வாமையாக இருப்பதால் அதற்குப் பதிலாக இந்திய அரசியல் முறைமையை ஏற்கத் தயாராக இருக்கின்றோம் என்பதையும், வடக்கு, கிழக்கு இணைப்பில் எமது நிலைப்பாட்டில் இருந்து நாம் மாற்றுக் கருத்து முன் வைக்கவில்லை என்பதையும் எடுத்துக் கூறினோம். அவர்களுடைய பயத்தை நீக்கி, எமது மக்களுடைய எண்ணத்திலே ஏற்பட்டுள்ள சமஷ்டி பற்றிய சிந்தனையை அவர்களுடைய உள்ளத்தில் இருந்து நீக்கச் செய்து மிக்க வலுவான ஐக்கிய இலங்கைக்கு ஆதரவு தேடுவோம் எனவும் குறிப்பிட்டு இருந்தோம். இந்த சூழ்நிலையில் புதிய அரசியல் சாசன எண்ணத்தை கைவிட்டு தற்போதுள்ள அரசியல் சாசனத்தில் நீண்ட காலமாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பொருத்தமான திருத்தங்களைக் கொண்டுவந்து தீர்த்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பதிலாக நிபுணர்கள் குழுவால் சிபாரிசு செய்யப்பட்ட அநேகமானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆலோசனைகளை வேண்டுமானால் ஏற்கலாம்.

நாம் மிக தீவிரமாக வலியுறுத்துவது யாதெனில் தென்னாபிரிக்காவின் அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள மிக வலுவான உரிமை சட்டத்தில் ஓரு சில எமக்கு பொருந்தாவிடினும், எமது அரசியல் சாசனத்தில் இணைத்துக் கொண்டு சட்ட மீறல்களுக்கு அதில் குறிப்படப்பட்டவாறு கடும் தண்டனையையும் அமுல்படுத்துவோமேயானால் எமது நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு பாதித் தீர்வு கிடைத்து விடும். அந்த விசேட கோரிக்கையை நான் ஜனாதிபதியிடமும் முன்வைத்துள்ளேன்.

நாட்டின் நன்மை கருதி தமிழ் மக்களுக்கு கூறக் கூடிய புத்திமதி யாதெனில் நாம் முரண்படுவதை கைவிட்டு எல்லோரும் ஒற்றுமையாக இந்திய முறையிலான அரசியல் அமைப்பை ஏற்று தென்னாபிரிக்க உரிமைகள் சட்டத்தை உள்வாங்கி எமது இனப்பிரச்சிகைக்கு தீர்வு காண்போமாக. சமஷ்டி முறையே மிகவும் சிறந்தது ஆனாலும் இன்றைய சூழ்நிலையினை அனுசரித்து சமஷ்டி கொள்கைக்கு மாற்றாக இந்திய முறையிலான அரசியல் அமைப்பே விரும்பத்தக்கதாகும்.

 


Add new comment

Or log in with...