சிறந்த கொழுந்தாளர்களை தெரிவு செய்து பரிசு, சான்றிதழ் வழங்கும் முன்னோடி திட்டம் | தினகரன்

சிறந்த கொழுந்தாளர்களை தெரிவு செய்து பரிசு, சான்றிதழ் வழங்கும் முன்னோடி திட்டம்

ஹெரன பெருந்தோட்டக் கம்பனியின் சமூக அங்கீகாரமிக்க நடவடிக்கை

ஹெரன பெருந்தோட்ட கம்பனியின் நிர்வாக அதிகாரி ரொசான் இராஜதுரையின் பணிப்புக்கிணங்க ஓல்டன் தோட்டத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களை ஊக்குவித்து, அவர்களின் பணித்திறனை அதிகரிக்கும் முகமாக மாதம்தோறும் சிறந்த கொழுந்தாளர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். ஓல்டன் மேற்பிரிவு, கீழ்ப்பிரிவு கிங்கோரா மற்றும் பீக்கன்பீல்ட் ஆகிய பிரிவுகளில் இருந்து மாதம் தோறும் தெரிவு செய்யப்படும் இப்பெண் தொழிலாளர்கள், மாதாந்த வேதன வழங்கலின் போது சகதொழிலாளர்கள் முன்னிலையில் நிர்வாக அதிகாரி ரொசான் இராஜதுரையினால் கையெழுத்திடப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த சில மாத காலமாக இடம்பெற்று வரும் இந்நிகழ்வானது தொழிலாளர்களிடையில் மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தவர்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. அவ்வாறு பரிசு பெற்ற தொழிளார்களின் சமூக அந்தஸ்து அதிகரித்துள்ளது. அவர்களுக்கு சிறந்த அங்கீகாரம் சமூகத்தில் மாத்திரமல்லாது குடும்ப உறவுகளிடம் இருந்தும் கிடைப்பதாக பரிசு பெற்ற பெண்ணொருவர் தெரித்தார். இந்த நடவடிக்கையினால் பெண்தொழிளார்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை காணக் கூடியதாக இருப்பதாகவும், மாதம் தோறும் இம்மாத வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள மிகுந்த ஆவல் காணப்படுவதாகவும் தெரிவித்த அவர், மேலும் தங்களுக்கிடையில் இது விடயத்தில் சுவாரசியம் காணப்படுவதாகவும் தெரித்தார்.

இவ்வாறான செயல்களினால் இளம் சமூகத்தினர் தோட்டத்தில் வேலை செய்ய ஆர்வம் காட்டுவர் என்பதும் அவரது எண்ணமாகும். ஹெரன பெருந்தோட்ட கம்பனி பல்வேறு விதமான சமுக நலன் சார் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. முகாமையாளர் சுபாஷ் நாராயணன் எமக்கு தகவல் தெரிவிக்கையில், இப்பணித் திட்டங்கள் கம்பனியின் உயர் பணிப்பாளர்களான ஜொகான் ரொட்ரிகோ மற்றும் உதேனி நவரத்ன ஆகியோரின் நேரடி கண்காணிப்பிலேயே முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இந்நிகழ்வு ஹெரன பெருந்தோட்ட கம்பனியின் அனைத்துத் தோட்டங்களிலும் இடம்பெறுவதாகவும் அவர் எமக்குத் தெரிவித்தார்.

அத்துடன் அத்தோட்டத்தின் பெண் தொழிலாளர்கள் கூறுகையில்,எமது ஓல்டன் தோட்ட நிர்வாகம் சிறப்பாக இயங்கி வருகின்றது.இதனால் இங்கு பணி புரியும் சகல தொழிலாளர்களும் மாதாந்தம் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு பணியாற்றுகின்றோம் என்றனர்.

“ மாதாந்தம் நாங்கள் 30 நாட்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். எமக்கு இத்தோட்ட நிர்வாகி சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.அதன்படி எந்த ஒரு குறையும் இல்லை. பணி செய்வதில் நாம் ஆர்வம் காட்டி வருகின்றோம். எங்களிடம் போட்டி உண்டு. யார் வெற்றியாளர் என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்று ஒற்றுமையாக பணியாற்றுகின்றோம்” என அவர்கள் குறிப்பிட்டதுடன் “தொடர்ந்து பணி புரிந்து தரமான தேயிலை கொழுந்து பறிப்பதன் மூலம் எமக்கு தோட்ட நிர்வாகம் மாதாந்தம் மற்றும் வருடாந்தம் போட்டிகள் வைத்து சான்றிதழ் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கின்றது.எங்களை தோட்டத் தொழிலாளர்கள் எனக் கூறுவதில்லை பண்ணையாளர்கள் என்றே அழைத்து வருகின்றனர். கடந்த பல வருடங்களாக இந்த தேயிலை பண்ணையில் பணி புரிகின்றேன். இரண்டு தடவை நான் சான்றிதழ் பெற்று பரிசும் பெற்றுள்ளேன்” என்று தொழிலாளி ஒருவர் குறிப்பிட்டதுடன், தம்மை ‘தொழிலாளர்கள்’ என்றழைக்காமல் ‘பண்ணையாளர்கள்’ என அழைக்கின்றமைக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினர்.

-செ.தி.பெருமாள்
(மஸ்கெலியா தினகரன் விஷேட நிருபர்)

 


Add new comment

Or log in with...